ஒரு பள்ளிப் பேருந்து குழந்தைகளை கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது, அது முடியும் வரை காத்திருக்க முடியாத ஒரு பெண், ஒரு தெருவிற்குள் நுழைந்து, நடைபாதை வழியே காரைச் செலுத்தி மீண்டும் பொறுப்பற்றத்தனமாகத் திரும்பிய போது காவல் துறையினரிடம் அகப்பட்டாள்.
காத்திருத்தல் பொறுமையையிழக்கச் செய்கிறது என்பது உண்மைதான். ஆனால், காத்திருக்கும் நேரத்தில் அநேக நல்ல காரியங்களைக் கற்றுக்கொள்ளவும், செய்யவும் முடியும். இதையறிந்த இயேசுவும் தன்னுடைய சீடர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல்” (அப். 1:5) காத்திருங்கள் “நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” (வச. 4) என்றார்.
அவர்கள் மேல்வீட்டறையில் எதிர்பார்ப்போடும், உற்சாகத்த்தோடும் கூடியிருந்தனர். இயேசு அவர்களிடம் காத்திருங்கள் என்று கூறியிருந்ததை அவர்கள் புரிந்துகொண்டிருந்தனர். இயேசு அவர்களிடம் ஒன்றும் செய்யாமலிருங்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் காத்திருக்கும் நேரத்தை ஜெபத்தில் செலவழித்தனர் (வச. 14) அத்தோடு அவர்கள் யூதாவின் இடத்தை நிரப்பும்படி, ஒரு புதிய சீடனைத் தேர்ந்தெடுத்தனர் என வேதம் கூறுகின்றது (வச. 26). அவர்கள் அனைவரும் ஜெபத்திலும் ஆராதிப்பதிலும் இணைந்திருந்த போது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீதிறங்கினார் (2:1-4).
சீடர்கள் வெறுமனே காத்திருக்கவில்லை. அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். நாமும் தேவனுடைய பதிலுக்காக, அவருடைய செயலுக்காக காத்திருக்கும்போது ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டியதில்லை அல்லது பொறுமையின்றி அவசரப்படவும் வேண்டாம். அதற்குப் பதிலாக ஜெபத்திலும், ஆராதனையிலும், மற்ற விசுவாசிகளோடுள்ள ஐக்கியத்திலும் நிலைத்திருந்து, அவர் செயல்படும்வரை எதிர்பார்த்திருப்போம். காத்திருத்தல் நம்முடைய இருதயத்தையும், மனதையும், சரீரத்தையும் வரப் போகும் காரியங்களுக்காக ஆயத்தப்படுத்துகின்றது.
ஆம், தேவன் நம்மையும் காத்திருக்கும்படி சொல்லும் போது, தேவன் நமக்கொரு திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பதையறிந்து நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் இருப்போம்.
தேவனே, நான் போராடாமல், காத்திருக்கும் காலம் என் வாழ்வில் நீர் தெரிவிக்கப் போகும் அன்பான காரியத்துக்காக என்பதனை உணரச்செய்யும்.
நீயும் இப்பொழுது காத்திருக்கின்ற காலத்திலிருக்கின்றாயா? இந்த காத்திருக்கும் காலத்தை, உன்னை ஆயத்தப்படுத்தும் காலமென உன்னால் கண்டு கொள்ள முடிகின்றதா?