யோவான் ஸ்நானனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்து வந்த, எகிப்தைச் சேர்ந்த மேரி (கி.பி. 344-421). தன்னுடைய வாலிப வயதில் ஆண்களை மயக்கி தவறான இன்பம் அனுபவித்துவந்தாள். அவளுடைய கேவலமான வாழ்வின் உச்சக்கட்டத்தில் அவள் எருசலேமிற்குப் புனித பயணம் செய்பவர்களையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எருசலேம் சென்றாள். ஆனால், அங்கு அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து குத்தப்பட்டவளாய் மன மாற்றம் பெற்றாள். அதன் பின்னர் மனந்திரும்பியவளாய் தனிமையில் பாலைவனங்களில் வாழ்ந்தாள். மேரியின் இத்தகைய முழு மாற்றம் தேவனுடைய கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் மீட்கும் வல்லமையையும் விளங்கச் செய்கின்றது.

இயேசுவின் சீடனான பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தான். இந்த மறுதலித்தலுக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் பேதுரு இயேசுவுக்காகத் தான் மரிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். (லூக். 22:33) அவனுடைய தோல்வியைக் குறித்த உணர்வு அவனைக் கசக்கிப் பிழியும் அடியாக அமைந்தது (வச. 61-62) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர் பேதுரு சில சீடர்களோடு சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். இயேசுவை மறுதலித்த மூன்று முறைகளுக்குப் பதிலாக, (யோவா. 21:1-3) அவன் இயேசுவின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கின்றார். அவன் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தியபோதும் இயேசு தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொடுக்கின்றார் (வச. 15-17). இயேசுவினுடைய இந்த அதிசயிக்கச் செய்யும் கிருபைதான் பேதுருவை கிறிஸ்துவின் சபையைக் கட்டும் படி முக்கிய பங்காற்றக் செய்தது. அவரை கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே கொடுக்கச் செய்தது.

நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வாழ்வின் தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்ததாக ஜெபஙகளாக ஆரம்பிக்கலாம். ஆனால். தேவனுடைய கிருபை வேறு வகையான முடிவையே கொண்டு வரும். அவருடைய கிருபையால் அவர் நம்மை விடுவித்து நம் வாழ்வை மாற்றுகின்றார்.