என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய நீல நிற ஜெல் பேனா என்னுடைய டவலின் மடிப்புகளுக்குள் ஒளிந்து, துவைக்கும் எந்திரத்திற்குள் சென்று, உலர்ப்பானுக்குள் வந்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அவலட்சணமான நீலக்கறைகள் எல்லாத் துணிகளிலும் காணப்பட்டன. என்னுடைய வெண்மையான டவல்கள் பாழாகிவிட்டன. அதிலுள்ள கடினமான கறைகளை நீக்க எந்தவொரு நிறநீக்கியாலும் முடியாது.
நான் வெறுப்படைந்தவனாய் அந்த டவல்களை பழைய துணிகளோடு சேர்த்தபோது, பழைய ஏற்பாட்டில் எரேமியா தீர்க்கதரிசி, பாவத்தின் கொடிய விளைவுகளைப் பற்றி விளக்கியுள்ளது. என் நினைவிற்கு வந்தது. தேவனைத் தள்ளி விட்டு, விக்கிரகங்களிடம் திரும்பிய போது, இஸ்ரவேல் ஜனங்கள், தங்களுக்கும் தேவனுக்குமுள்ள உறவின்மீது நீங்காதகறையை ஏற்படுத்திக் கொண்டனர் (எரே. 2:13). “நீ உன்னை உவர் மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்கும்” என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கின்றார் (வச. 22). தங்கள் பாவங்களால் ஏற்பட்ட கறையை நீக்க அவைகளால் கூடாமற்போயிற்று என்கின்றார்.
நம்முடைய பாவக் கறையை நீக்க நாம் எடுத்துக் கொள்ளும் சுய முயற்சிகள் யாவும் வீணானவை. ஆனால், நம்மால் முடியாததை இயேசு செய்து முடித்தார். அவருடைய சாவு மற்றும் உயித்தெழுதலின் வல்லமையால் அவர் நம்மை சுத்திகரிக்கின்றார். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:7).
இந்த உண்மையை நாம் நம்புவதற்கு கடினமாயிருந்தாலும், உறுதியாகப் பற்றிக்கொள். இயேசுவால் நீக்க முடியாத பாவக்கறை ஒன்றுமேயில்லை. இயேசுவிடம் வரும் எவரிடமுமுள்ள பாவக் கறைகளை கழுவி சுத்திகரிக்க அவர் ஆவலாயிருக்கின்றார் (வச. 9). கிறிஸ்துவின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நாம், ஒவ்வொரு நாளும் விடுதலையோடும், நம்பிக்கையோடும் வாழ முடியும்.
நம்முடைய பாவக்கறைகளை இயேசுவின் இரத்தம் கழுவி சுத்திகரிக்கும்.