எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிமுழுவதும், அது ஓர் இருண்ட மற்றும் துயரம் நிறைந்த நாளாகக் காணப்பட்டது. பட்டணத்தின் மதிற்சுவருக்கு வெளியே ஒரு மலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக திரள் கூட்ட மக்களை தன்னைப் பின்பற்றும்படி கவர்ந்திழுத்த ஒரு மனிதன், ஒரு கோர மரச்சிலுவையில் வேதனையாலும், அவமானத்தாலும் நிறைந்தவராய் தொங்கிக் கொண்டிருக்கின்றார். துக்கிப்பவர்களின் அழுகையும்,துயரம் நிறைந்த ஓலமும் கேட்கின்றது. பகலின் நடுவேளையில் சூரியன் தன் ஒளியினால் வானைப் பிரகாசிக்கச் செய்யாமல் மறைந்தது. சிலுவையில் அந்த மனிதனின் கொடுமையான வேதனைகள் முடிவிற்கு வந்தபோது அவர் உரத்த குரலில், “முடிந்தது” என்றார் (மத். 27:50, யோவா. 19:30).
அதே வேளையில் பட்டணத்திற்குள்ளேயிருந்த பெரிய தேவாலயத்தில் மற்றொரு சத்தம் கேட்கின்றது. அது ஒரு துணி கிழிக்கப்படும் சத்தம். அதிசயமாக எந்தவொரு மனிதனின் உதவியும் இல்லாமல், ஒரு பெரிய தடிமனான திரை, தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்தையும் வெளிப்பகுதியையும் பிரித்த அந்தத் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது (மத். 27:51).
அந்த கிழிக்கப்பட்ட திரை சிலுவையின் உண்மையை வெளிப்படுத்தியது. இப்பொழுது நாம் தேவனிடம் செல்லுவதற்கான ஒரு புதிய வழியைத் திறந்தது. சிலுவையில் தொங்கிய மனிதன் இயேசு தன்னுடைய இரத்தம் முழுவதையும் நமக்காக பலியாகச் சிந்திவிட்டார். இதுவே உண்மையும், போதுமானதுமான கடைசி பலி. இந்த பலியை (எபி. 10:10) விசுவாசிக்கிற யாவரும் பாவ மன்னிப்பை பெற்று தேவனோடுள்ள உறவில் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் (ரோ. 5:6-11).
அந்த முதல் பெரிய வெள்ளிக்கிழமையின் இருளினூடே நாம் மிகச் சிறந்த செய்தியைப் பெற்றுக் கொண்டோம். நம்மை பாவத்திலிருந்து மீட்டு, தேவனோடு நாம் என்றென்றும் உறவை அனுபவிக்கும்படி இயேசு நமக்கு ஒரு புது வழியைத் திறந்துள்ளார் (எபி. 10:19-22). இந்த கிழிக்கப்பட்ட திரையின் செய்தியைக் கொடுத்த தேவனுக்கு நன்றி.
பெரிய வெள்ளியன்று நடைபெற்ற உண்மை எப்படி உன்னை எதைக் கூறுகிறது? தேவனோடு உறவை ஏற்படுத்திக் கொள்வதென்பது உனக்கு எப்படித் தோன்றுகிறது?