நாற்பத்தைந்து ஆண்டுகளாக, விளையாட்டையே தன் தொழிலாகக் கொண்டு, வாழ்ந்த வீரர் ஜெரி கிரேமர், விடுபட்டபோது, தன்னுடைய விளையாட்டுத் துறையில் (புகழின் உச்சநிலை மரியாதையை) அடையவில்லை. ஆனால், அநேக வேறுவகையான சாதனைகளையும், புகழ்ச்சியையும் அவர் பெற்றிருந்தார். இந்த துறையின் உச்ச விருது அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அந்த மரியாதைக்கு அவர் பத்துமுறை சிபாரிசு செய்யப்பட்டும், அது அவருக்கு வாய்க்கவேயில்லை. அவருடைய நம்பிக்கை அநேக முறை உடைக்கப்பட்ட போதும் கிரேமர், “தேசிய கால்பந்து கழகம் என்னுடைய வாழ்வில் நூறு பரிசுகளை வழங்கியுள்ளது. ஆனால், எனக்குத் தரப்படாத ஒன்றினைத் குறித்து நான் கோபப்படுவதும் மனம் வருந்துவதும் முட்டாள்தனம்” என்றார்.
யாராயிருந்தாலும், இத்தனை அதிக முறை தனக்குச் சேர வேண்டிய மரியாதையை மற்ற விளையாட்டு வீரருக்குச் சாதகமாக வழங்கிய போது தனக்குள் கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக் கொள்ளக் கூடும். ஆனால், கிரேமர் அவ்வாறில்லை. அவர் நடந்து கொண்ட விதம், நாம் எவ்வாறு நம்முடைய இருதயத்தை பொறாமையான எண்ணங்களால் கறைபடாதபடி பாதுகாப்பது என்பதை விளக்குகின்றது. “பொறாமையோ எலும்புருக்கி” (நீதி. 14:30) என வேதாகமம் கூறுகின்றது. நமக்குச் சொந்தமல்லாத ஒன்றின்மீது அதிக நாட்டம் உடையவராய், அதனையே சிந்தித்துக் கொண்டு, நாம் பெற்றுள்ள பல நன்மைகளை உணராதிருப்போமாயின் தேவன் தரும் சமாதானத்தை இழந்து விடுவோம்.
பதினொன்றாவது முறை ஜெரி கிரேமர் தேர்வு செய்யப்பட்டபோது, தேசிய கால்பந்து கழகத்தின் மிக உயர்ந்த மரியாதையை பிப்ரவரி 2018ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். நம்முடைய உலக ஆசைகளும் இறுதிவரை நிறைவேற்றப்படாமலிருக்கலாம். தேவன் நமக்கு தாராளமாகத் தந்துள்ள அநேகக் காரியங்களில் நாம் கவனத்தைச் செலுத்துவோமாயின் தேவன் நமக்குத் தரும் அமைதியான இருதயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் எதை அடைய விரும்பினோம், எதை அடையவில்லை என்பது காரியமல்ல, தேவன் நம் வாழ்வில் கொண்டு வரும் சமாதானத்தைப் பெற்று அதில் மகிழ்ச்சியாயிருப்பதே சிறந்த வாழ்வு.
தேவன் நம் இருதயத்துக்கு சமாதானத்தோடு இன்னும் அநேக நன்மைகளையும் தருகிறார்.