மதிய உணவிற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஜெபத்திற்காக தலை வணங்க, ஜெஃப் ஜெபித்தான். “அப்பா, நாங்கள் உம்முடைய காற்றைச் சுவாசிக்கவும், உம்முடைய உணவை உண்ணவும் எங்களுக்குதவியதால் உமக்கு எங்களது நன்றியை கூறிக் கொள்கின்றோம்” என்றான். ஜெஃப் இப்பொழுது தனது வேலையை இழந்து கஷ்டங்களின் மத்தியில் இருக்கின்றான். ஆனால், அவனுடைய இருதயம் தேவன் மீதுள்ள நம்பிக்கையோடிருப்பதால், எல்லாம் தேவனுடையது என்பதைக் கண்டு கொண்டான். அது என்னை ஆழமாகத் தொட்டது. என்னுடைய அனுதினவாழ்வில் நான் பயன்படுத்தும் அடிப்படை காரியங்களிலிருந்து எல்லாம் தேவனுடையவையே என்பதை நான் உண்மையாகத் தெரிந்து கொண்டுள்ளேனா? தேவனே அவற்றை பயன்படுத்த என்னை அனுமதித்துள்ளார்.
தாவீது ராஜா, எருசலேம் தேவாலயத்தைக் கட்ட, இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து காணிக்கைகளைச் சேகரித்தபோது அவனும் ஜெபித்தான். “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது. உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்… எல்லாம் உம்முடையது” (1 நாளா. 29:14,16) என்று ஜெபித்தான்.
நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையானவற்றையெல்லாம் தேவனே தருகின்றார். “அவரே ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (1 நாளா. 8:18) என வேதாகமம் சொல்லுகிறது. நாம் வைத்திருப்பதெல்லாம் கடனாகப் பெறப்பட்டவை என்பதை நினைத்து, உலகப் பொருளோடு நமக்கிருக்கின்ற பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு திறந்த கரங்களோடும், திறந்த உள்ளத்தோடும் தாராளமாகப் பகிர்ந்து கொள்வோம். ஏனெனில், நாம் தேவனிடமிருந்து அனுதினமும் பெறுகின்ற இரக்கத்திற்காக நன்றியுள்ளவர்களாயிருப்போம்.
தேவன் தாராளமாகக் கொடுக்கின்ற தயாள பிரபு. அவர் அன்பினால் தன்னுடைய குமாரனையே நமக்காகத் தந்தார் (ரோம. 8:32). நாம் மிக அதிகமாகப் பெற்றுள்ளோம். நாம் பெற்றுள்ள சிறிதும், பெரிதுமான அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் நம்முடைய உள்ளம் நிறைந்த நன்றியை அவருக்குச் செலுத்துவோம்.
நமக்குள்ளதெல்லாம் தேவனுடையவைகளே.