நான் ஏற்கனவே தாமதமாகவே வந்திருக்கின்றேன், என்னிடம் விளையாட்டு காட்டுகின்றாயா? என எனக்குள்ளே பேசிக் கொண்டேன். எனக்கெதிரேயிருந்த சாலை குறியீட்டு விளக்கு என்னுடைய எதிர்ப்பை சற்று மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்துகின்றது. ‘தாமதத்தை எதிர்பார்” என்பதே அந்த அறிவுறுத்தல். அனைத்து வாகனங்களும் மெதுவாகச் செல்கின்றன.
நான் சிரித்துக் கொண்டேன். நான் எந்த காரியத்தையும் சரியான நேரத்தில் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பவன். நான் இப்பகுதியில் சாலைபோடும் பணி நடைபெறுமென எதிர்பார்க்கவில்லை.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் நம்மில் சிலருடைய எதிர்காலத் திட்டங்கள் மெதுவாகச் செயல்படுகின்றன அல்லது வேறுபாதையில் நம் வாழ்வை செலுத்தும்படி திருப்பப்படுகின்றன. நான் இதனைக் குறித்து நினைக்கும் போது, என்னுடைய வாழ்விலும் அநேக நேரங்களில் சிறிய மற்றும் பெரிய காரியங்களில் திசை திருப்பப்படுவதையும், தாமதம் ஏற்படுவதையும் நினைவுகூர முடிகின்றது.
சாலொமோன் தன் வாழ்வில் ‘தாமதத்தை எதிர்பார்” என்ற ஒரு செய்தியைச் சந்தித்ததேயில்லை. ஆனாலும் நீதிமொழிகள் 16ல் அவர் நம்முடைய திட்டங்களுக்கு எதிராக தேவனுடைய வழிநடத்துதல் அமைகிறது என்பதைத் தெரிவிக்கின்றார். வசனம் 1 கூறுகின்ற, ‘மனதின் யோசனைகள் மனுஷனுடையது. நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்” என்ற கருத்து இந்த மொத்த செய்தியையும் உள்ளடக்குகின்றது. இதனையே வசனம் 9, ‘மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும். அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்” என்று கூறுகின்றது. இதனை இன்னும் தெளிவாகக் கூறுவோமாயின், நடக்கவேண்டிய காரியங்களைக் குறித்து திட்டங்களை நாம் போடலாம். ஆனால் தேவன் வேறொரு பாதையின் வழியே நம்மை நடத்திச் செல்லலாம்.
இந்த ஆவிக்குரிய உண்மை வழியை நாம் எவ்வாறு தவறவிடுகின்றோம்? நான் என்னுடைய திட்டங்களைப் போடுகின்றேன். தேவனுடைய திட்டம் என்னவென்பதை கேட்கத் தவறிவிடுகின்றேன். என்னுடைய திட்டத்தில் தடைகள் வரும்போது நான் விரக்தியடைகின்றேன்.
நாம் கவலைப்படுவதற்குப் பதிலாக, சாலொமோன் கற்றுத் தருவதைப் போன்று அவரை நம்பி வாழக் கற்றுக்கொள்வோம். நாம் ஜெபத்தில் அவரைத் தேடும் போதும் அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும் போதும், தேவன் படிப்படியாக நம்மை வழிநடத்தி, தொடர்ந்து அவருடைய பாதையில் நடத்திச் செல்வார்.
பதட்டத்தை விட்டுவிட கர்த்தரை நம்பு. தேவன் உனக்கு வழி காட்டுவார்.