தன்னுடைய சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன, இனி வாழ்நாள் முழுவதும் டயலிஸிஸ் செய்துகொள்ள வேண்டுமென தெரிந்து கொண்டபோது ஸ்யூ ஃபென், அந்த சிகிச்சையைத் தொடர விரும்பவில்லை. பணி ஓய்வுபெற்று, தனியாக, ஆனால், நீண்ட நாட்களாக இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் வாழும் அவர், தன்னுடைய வாழ்நாளை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், நண்பர்களின் விடாப்பிடியான முயற்சியால் டயலிஸிஸ் செய்ய சம்மதித்ததோடு, தேவன் அவளுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டாள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தான் செல்லும் ஆலயத்தில் பெலவீனப்படுத்தும் ஒரு வியாதியோடு போராடிக் கொண்டிருந்த ஒரு சிநேகிதியைச் சந்தித்த போது ஸ்யூ தன்னுடைய அனுபவத்திற்கு ஒரு பயன் வந்ததைக் கண்டாள். அந்தப் பெண்ணும் தனிமையில், தன்னை உண்மையாய் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் யாருமின்றி தவித்தாள். ஸ்யூ அவளுடைய உடல், மனரீதியானத் தேவைகளை புரிந்து கொண்டதோடு, அவளுக்குத் தனிப்பட்ட முறையில் உதவவும் முன்வந்தாள். ஸ்யூ தான் சென்ற பாதையின் அனுபவம், அந்தப் பெண்ணோடு அவளுடைய பாதையில் துணையாகச் செல்ல உதவியது. வேறெந்த நபராலும் கொடுக்கமுடியாத ஆறுதலை அவளால் கொடுக்க முடிந்தது. ‘தேவன் என்னை எப்படி பயன்படுத்த முடியுமென்பதைத் தெரிந்து கொண்டேன்” என்று கூறினாள்.
நாம் ஏன் கடினமான பாதையில் வழிநடத்தப் படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், தேவன் நம்முடைய துன்பங்களை வேறுவகையில் பயன்படுத்துகின்றார். நம்முடைய சோதனையின் மத்தியில் அவரின் ஆறுதலையும் அன்பையும் தேடி அவரிடம் திரும்புவோமாயின், நாம் பிறருக்கு உதவியாயிருக்கும்படி நம்மை பெலப்படுத்துவார். பவுலும் தன்னுடைய சோதனைகளின் வழியே தேவனுடைய திட்டத்தைத் தெரிந்து கொண்டார். அது அவருக்கு தேவனிடமிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், பிறருக்கு ஆசீர்வாதமாக அதை பயன்படுத்தவும் வாய்ப்பளித்தது (2 கொரி. 1:4). நமக்கு வரும் துன்பங்களையும், வேதனைகளையும் நாம் தடுத்துவிட முடியாது. ஆனால், துன்பத்தின் வழியே தேவனுடைய வல்லமையைப் பெற்று, அதனை நன்மையான பணிக்கு பயன்படுத்துவோமாக.
பிறருக்கு ஆறுதலளிக்கும்படி தேவன் உன்னை எப்படி பயன்படுத்துகின்றார்? எப்படி உன்னுடைய விடாப்பிடியான முயற்சிக்கு விசுவாசம் உதவியாயிருந்தது?