அநேக நான்கு வயது சிறுமிகளைப் போன்று ரூபியும் ஓடவும், பாடவும், நடனமாடவும், விளையாடவும் விரும்புவாள். ஆனால், அவள் அவ்வப்போது தனது முழங்காலில் ஏற்படும் வலியைப் பற்றிக் கூறிக் கொண்டேயிருந்தாள். ரூபியின் பெற்றோர் அவளை மருத்துவ ஆய்வுக்கு கொண்டு சென்றனர். அதன் அறிக்கை மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகயிருந்தது. அந்த மருத்துவ ஆய்வறிக்கை அவளுக்கு புற்றுநோயிருப்பதைத் தெரிவித்தது. நரம்பில் ஏற்பட்டுள்ள புற்றுநோய், அதுவும் நான்காவது நிலை. ரூபி பிரச்சனைக்குள்ளாயினாள். வெகு சீக்கிரம் அவளை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
மருத்துவமனையில் ரூபியைப் பார்க்க அநேகர் வந்தனர். அது கிறிஸ்மஸ் காலமாகையால் வீட்டை விட்டு மருத்துவமனையில் இருப்பது கடினமாயிருந்தது. ரூபியின் செவிலியர் ஒரு யோசனையைக் கொடுத்தனர். அவளுடைய அறைக்கு வெளியே ஒரு தபால் பெட்டியை வைப்போம். அதில் உறவினரும் நண்பர்களும் கடிதங்களில் தங்கள் ஜெபங்களையும், உற்சாகப்படுத்தும் வாசகங்களையும் எழுதிப் போடலாம் என்றார்கள். அந்த வேண்டுதல் முக நூலில் தெரிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அறியாத நபர்களிடமிருந்தும் கடிதங்கள் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. ரூபிக்கும் அது ஆச்சரியமாயிருந்தது. ஒவ்வொரு கடிதம் வந்த போதும் (மொத்தத்தில் 100,000க்கும் மேல்) ரூபி உற்சாகப்படுத்தப்பட்டாள். கடைசியாக அவளால் வீட்டிற்கு வர முடிந்தது.
பவுல் கொலோசெ சபையினருக்கு எழுதிய கடிதமும் இதேப் போன்றதே (கொலோ. 1:2). அந்தப் பக்கங்களில் எழுதப்பட்ட வார்த்தைகள் நம்பிக்கையைக் கொண்டு வந்தன. தொடர்ந்து கனிதரும் வாழ்க்கை வாழவும், தேவனை அறிகிற அறிவோடு வல்லமையையும், பொறுமையையும், நீடிய சாந்தத்தையும் பெற்றுக்கொள்ள நம்பிக்கை கொடுத்தது (வச. 10-11). கொலோசெ சபை விசுவாசிகளுக்கு வளர்ச்சியடைய நல்ல மருந்தாக அமைந்தது. நமக்காக ஒருவர் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கொலோசெ சபை விசுவாசிகளை இயேசு கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தில் நிலைத்திருக்க, பெலப்படுத்தியது.
ஊக்கத்தைக் கொடுக்கும் நம்முடைய வார்த்தைகள், தேவையோடிருப்பவர்களிடம் அற்புதமாக வேலை செய்யும்.
சிலரை ஊக்கப்படுத்தும்படி, தேவன் என் மனதில் நினைவுப்படுத்துகின்றார். அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்க உதவுகின்றார்.