‘எஸ்தர், உனக்கு நம்முடைய சிநேகிதி ஹெலனிடமிருந்து ஒரு பரிசு வந்தள்ளது” என பணியை முடித்து வீடு திரும்பிய என் தாயார் என்னிடம் கூறினார்கள். நாங்கள் வளர்ந்த பின்னர் பரிசுகள் அதிகம் வருவதில்லை. எனவே ஒரு பரிசை தபாலில் பெறுவது இரண்டாவது கிறிஸ்மஸ் போன்று மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அருமையான பெண்ணின் மூலம் தேவன் என்னையும் நேசிக்கின்றார், நினைக்கின்றார், என்னை கனப்படுத்தியுள்ளார்.
அந்த ஏழை விதவை தபித்தாள் (தொற்காள்) என்னைப் போன்ற அநேகருக்கு உடைகளை தயாரித்துக் கொடுத்தாள். அவள் யோப்பா பட்டணத்தில் வாழ்ந்து, இயேசுவைப் பின்பற்றி வந்த ஒரு பெண். அவளுடைய சமுதாயம் அவளின் அன்பின் கிரியைகளை நன்கு அறிந்திருந்தது. அவள் நற்கிரியைகளையும், தருமங்களையும், மிகுதியாகச் செய்து வந்தாள் (அப். 9:36). அவள் சுகவீனமாகி, மரித்துப்போனாள். அப்பொழுது பேதுரு அருகிலுள்ள ஒரு பட்டணத்திற்கு வந்திருந்தார். எனவே இரண்டு விசுவாசிகள் அவரிடம் சென்று அவரை யோப்பா பட்டணத்திற்கு வரும்படி வருந்திக் கேட்டுக்கொண்டனர்.
பேதுரு அங்கு வந்த போது விதவைகளெல்லாரும் ‘தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து…” (வச. 39) அவளுடைய கனிவான செயல்களை எடுத்துரைத்தனர். அவர்கள் பேதுருவிடம் செயல்படுமாறு கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால், பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பேதுரு ஜெபித்தார். தேவன் அவளை உயிர் பெறச் செய்தார். தேவனுடைய இரக்கம் அதைச் செய்தது. ‘இது யோப்பா பட்டணம் எங்கும் தெரிய வந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (வச. 42).
நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் கனிவாக நடந்து கொண்டால், அதன் மூலம் அவர்கள் தேவனிடம் திருப்பப்படுவர். தேவனால் கனம் பெறுவர்.
தேவனுடைய இரக்கத்தினை காட்டும் உயிருள்ள சாட்சிகளாக நாம் வாழ்ந்து, நம்முடைய முகத்திலும், கண்களிலும் சிரிப்பிலும் அவருடைய இரக்கத்தைக் காண்பிப்போம்.
- அன்னை தெரஸா