1960 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சில வித்தியாசமான சித்திரங்கள் பிரசித்திப்பெற்றன. அவற்றில் மனிதர்களும், விலங்கினங்களும் பெரிய கவலை தோய்ந்த கண்களோடு வரையப்பட்டிருந்தன. சிலர் அந்த வேலையை விமர்சித்தனர், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனா. அந்த கலைஞரின் கணவன், தன் மனைவியின் படைப்புகளைப் பிரபலமாக்கிய போது, அவர்கள் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்தனர். அந்த கலைஞரின் கையெழுத்தான மார்கரெட் கீன் என்பது அவளுடைய எந்தப் படைப்பிலுமே காணப்படவில்லை. அதற்குப்பதிலாக மார்கரெட்டின் கணவன் தன் மனைவியின் படைப்புகளைத் தன்னுடையது போல வெளியிட்டான். மார்கரெட் இந்த ஏமாற்று வேலையைக் குறித்து பயந்து, 20 ஆண்டுகள், தன்னுடைய திருமணவாழ்வு முற்றுப் பெறும் வரை அமைதியாயிருந்தார். பின்னர் ஒரு நீதிமன்ற அறையில் அவர்களிருவரும் சித்திரம் தீட்டி தங்களுடைய கலைத்திறனின் அடையாளத்தைக் நிரூபிக்குமாறு ஏற்பாடாயிற்று.

அந்த மனிதனின் ஏமாற்று வேலை முற்றிலும் தவறானது. இயேசுவைப் பின்பற்றும் நாமும் தேவன் நமக்குக் கொடுத்துள்ள தாலந்துகளின் பெருமைகளை நமக்குரியதாகச் சொந்தம் கொண்டாடுகிறோம். நாம் வெளிப்படுத்தும் தலைமத்துவ பண்பு, நாம் பிறரிடம் காட்டும் நற்செயல்கள் ஆகியவற்றை நம்முடையதாக்கிக் கொள்கின்றோம். ஆனால், இத்தகைய நற்குணங்களெல்லாம் தேவக் கிருபையாலேயே செயல்படுத்த முடியும். எரேமியா 9ல், தீர்க்கதரிசி, மக்களின் மனதில் தாழ்ச்சியும், குற்றத்தை உணரும் உள்ளமும் இல்லையெனப் புலம்புகின்றார். நம்முடைய ஞானத்தைக் குறித்தும், நம்முடைய பராக்கிரமத்தைக் குறித்தும் அல்லது நம்முடைய ஐசுவரியத்தைக் குறித்தும் நாம் மேன்மை பாராட்ட வேண்டாமெனவும், அவரே தேவனென்று புரிந்துகொண்டு ‘பூமியிலே கிருபையையும், நியாயத்தையும், நீதியையும் செய்கிறவர் கர்த்தர்” (வச. 24) என்று அவரை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைப் பாராட்டக்கடவன் என்றும் கர்த்தர் சொல்கின்றார் என்று எரேமியா எழுதுகின்றார்.

நம்மைப் படைத்த உண்மையான கலைஞரை நாம் கண்டு கொண்டோமேயாயின், நம் உள்ளம் நன்றியால் நிரம்பும். ‘நன்மையான எந்த ஈவும் பரிபூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக். 1:17). எல்லாத் துதியும் மகிமையும் நன்மையான ஈவுகளைத் தருகின்ற தேவனுக்கே உரியது.