என்னுடைய கணவர் ஒரு நண்பனை ஆலயத்திற்கு அழைத்துவந்தார். ஆராதனை முடிந்தபோது அந்த நண்பர், “நான் பாடல்களை விரும்புகிறேன், அதன் சூழ்நிலையையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை. மரியாதையில் இத்தனை உயரமான இடத்தை ஏன் நீங்கள் இயேசுவுக்குக் கொடுக்கிறீர்கள்? எனக் கேட்டார். பின்னர் என் கணவர் அவரிடம், கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவோடுள்ள உறவு. அவரில்லாமல் கிறிஸ்தவத்திற்கு அர்த்தமேயில்லை. இயேசு எங்கள் வாழ்வில் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள் இங்கு ஒன்று கூடி அவரைப் போற்றுகின்றோம் என விளக்கினார்.
இயேசு யார்? அவர் நமக்கு என்ன செய்துள்ளார்? இந்த கேள்;விகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயர் முதலாம் அதிகாரத்தில் பதிலளித்துள்ளார். தேவனை யாரும் கண்டதில்லை. இயேசு, தேவனின் தற்சுரூபமாக வந்து அவரைப் பிரதிபலித்தார் (வச. 15). இயேசு, தேவக் குமாரன். நமக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கும்படி வந்தார். நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய வந்தார். பாவம் நம்மை பரிசுத்த தேவனிடமிருந்து பிரித்துவிட்டது. எனவே பாவமில்லாத ஒருவர் தான் தேவ சமாதானத்தை கொடுக்க முடியும். அதுதான் இயேசுகிறிஸ்து (வச. 14,20) வேறு வகையாகச் சொல்வோமானால் நாம் தேவனிடமும், வாழ்வுக்குள்ளும் செல்லும் வழியை, வேறொருவராலும் செய்யமுடியாததை இயேசு நமக்காகத் திறந்து கொடுத்தார்
(யோவா. 17:2).
ஏன் இயேசு அத்தகைய உயர்வான இடத்தைப் பெற பாத்திரராயிருக்கிறார்? அவர் சாவை மேற்கொண்டார். அவருடைய அன்பினாலும், தியாகத்தாலும் நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்தார். அவரே நமக்கெல்லாமுமாயிருக்கின்றார்.
நாம் அவருக்கு மகிமையைச் செலுத்துகின்றோம், ஏனெனில் அவரே அதற்குத் தகுந்தவர். நாம் அவரை உயர்த்துகின்றோம், ஏனெனில், அதுவே அவருடைய இடம். நாம் நம் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தை இயேசுவுக்குக் கொடுப்போம்.
நம் ஆராதனைகளின் மையம் இயேசு கிறிஸ்துவே.