கானாவின் வட பகுதியிலுள்ள சகோகு என்ற இடத்திலிருக்கும் என்னுடைய தாத்தாவின் வீட்டில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடியபோது நான் தனிமையையுணர்ந்தேன். அப்போது எனக்கு பதினைந்து வயது. என்னுடைய பெற்றோரும், உடன் பிறந்தோரும் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தனர். முந்திய வருடங்களில் நான் அவர்களோடும், என்னுடைய கிராமத்தின் நண்பர்களோடும் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடிய போது, அது மிக அதிகமாகவும் நினைவு கூறத்தக்கதாகவுமிருக்கும். ஆனால், இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை அமைதியாகவும், தனிமையிலும் இருந்தது. கிறிஸ்மஸ் அன்று காலை நான் எனது தரைப் படுக்கையில் படுத்திருந்தபோது ஒரு பாடல் என் நினைவுக்கு வந்தது. வருடம் முடிந்து விட்டது, கிறிஸ்து பிறப்பு வந்து விட்டது. தேவக் குமாரன் பிறந்து விட்டார், அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும்… என்பதான அப்பாடலை நான் முணுமுணுத்து எனக்குள்ளாகவே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தேன்.
என்னுடைய பாட்டியம்மா என்னிடம், “அது என்ன பாடல்?” எனக் கேட்டார். என்னுடைய பாட்டி, தாத்தாவிற்கு கிறிஸ்து பிறப்பு பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும் தெரியவில்லை. எனவே நான் கிறிஸ்துவைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அந்தக் கணமே என்னுடைய தனிமை மறைந்து ஒரு பிரகாசத்தை உணர்ந்தேன்.
வயல் வெளிகளில் தனிமையில் தன் ஆடுகளுடன் அவ்வவ்போது சில கொடிய விலங்கினங்களை மட்டும் சந்தித்துக் கொண்டிருந்த மேய்ப்பனான தாவீதும் தனிமையை உணர்ந்தான். அந்த ஒரு நேர மட்டுமல்ல, பிற்கால வாழ்விலும் அவன், “நான் தனித்தவனும், சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்” (சங். 25:16) என்கின்றான். ஆனால், தாவீது தனிமையை உணர்ந்த போதிலும், கைவிடப்பட்டவனாக தன்னைக் கருதவில்லை. அதனால் அவன், “நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன். நான் உமக்குக் காத்திருக்கின்றேன்” (வச. 20-21) எனப் பாடுகின்றான்.
அவ்வப்போது நாமும் தனிமையை எதிர் கொள்கிறோம். இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பை நீ எங்கிருந்து கொண்டாடினாலும், தனிமையிலோ அல்லது கூட்டத்தோடோ, நீ கிறிஸ்து தரும் சந்தோஷத்தோடு கொண்டாடு.
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் இயேசு நம்மோடிருந்தால் நாம் ஒருபோதும் தனிமையிலிருப்பதில்லை.