தம் வாழ்வில் சவால்களையும், சுகவீனத்தையும் சந்திக்கின்ற குடும்ப நபர்கள், நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி அந்தக் குழுவிலுள்ள மற்ற அனைவரும் ஜெப விண்ணப்பங்களைக் கொடுக்க, தயான் மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்ப நபர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால். தயான் தன்னுடைய வேண்டுதலை வெளிப்படுத்தவில்லை. அவள் இதனைக் குறித்துச் சொன்னால், பிறரின் முகபாவனையையும், அவர்களின் கேள்விகளையும் ஆலோசனைகளையும் அவளால் சகித்துக் கொள்ள முடியாதென நினைத்தாள். எனவே அவள் இந்த வேண்டுதலை வெளியில் சொல்லாமலிருப்பதே மேல் என எண்ணினாள். தான் நேசிக்கும் இந்த நபர் இயேசுவின் விசுவாசியாயிருந்தும் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்றெண்ணினாள்.
தயான் இந்த ஜெப வேண்டுதலை இந்தக் குழுவிலுள்ள மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாவிடினும், அவள் நம்பும் சில சிநேகிதிகளிடம் தன்னோடு ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்வாள். அவர்களோடு சேர்ந்து, தான் நேசிக்கும் இந்த நபரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்குமாறும், அவரும் கிறிஸ்து தரும் விடுதலையை அநுபவிக்க உதவுமாறும், தயானுக்குத் தேவையான பொறுமையையும் சமாதானத்தையம் தருமாறும் ஜெபிப்பாள். அவ்வாறு ஜெபிக்கும்போது அவள் ஆறுதலையும், தேவன் தரும் பெலனையும் பெற்றுக் கொண்டாள்.
நம்மில் அநேகர் உண்மையாகவும், தொடர்ந்தும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சில விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கப்படாமலிருக்கலாம். ஆனால், தேவன் நம்மீது கரிசனையுள்ளவர், அவர் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார் என்பதை உறுதியாக நம்புவோம். அவர் நம்மை இன்னும் அவரோடு நெருங்கி நடக்க விரும்புகின்றார். நாமும், நம்பிக்கையிலே சந்தோஷமாயும், உபத்திரவத்திலே பொறுமையாயும், ஜெபத்திலே உறுதியாயும் தரித்திருந்து (ரோம. 12:12) அவரையே சார்ந்து வாழ்வோம்.
உண்மையுள்ள இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் தேவனிடத்தில் சேரக்கடவோம். எபிரெயர் 10:22