சில மாதங்களுக்கு முன், மூன்று மணி நேர பயண தூரத்தில் இருக்கும் என் மகன் வீட்டில் ஒரு கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நினைத்ததை விட அந்த வேலை முடிய அதிக நாட்கள் ஆயிற்று. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று மாலை முடித்துவிட வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும், முடிவடையாத வேலைகள் இருந்தன.
ஏன் என்று யோசித்தேன். தாமதம் ஆவதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று யோசித்தேன். அதற்கான விடை அடுத்த நாள் காலையில் கிடைத்தது. காலையில் வேலைக்கான உபகரணத்தை எடுக்கும்போது, என் தொலைபேசி ஒலித்தது. தெரியாத நபர் “உங்கள் மகள் ஒரு விபத்தில் அடிபட்டிருக்கிறாள். நீங்கள் உடனே வரவேண்டும்” என்றார்.
அவள் வீடு என் மகன் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் பதினான்கு நிமிடங்களில் அவள் அருகில் இருந்தேன். நான் என் வீட்டில் இருந்திருந்தால், வந்து சேர மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். நான் மருத்துவ ஊர்தியின் பின்னாலேயே சென்று, அறுவை சிகிச்சைக்கு முன் அவளுக்கு ஆறுதல் கூறினேன். ஆறுதலாக அவள் கையைப் பிடித்து அமர்ந்திருந்த வேளையில், அந்த கட்டட வேலை தாமதம் ஆகாதிருந்தால், என்னால் அவளோடு இருந்திருக்க முடியாது என்று உணர்ந்தேன்.
நம் தருணங்கள் தேவனுக்குச் சொந்தமானவை. எலிசாவின்மூலம் ஆண்டவர் உயிர்ப்பித்த சிறுவனின் தாயின் அனுபவமும் இதைப்போன்றதே (2 ராஜாக்கள் 4:18-37). பஞ்சத்தின் காரணமாக நாட்டை விட்டுச் சென்ற அவள், ராஜாவிடம் தன் நிலத்தைக் கேட்க, பல வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தாள். அதே நேரத்தில், தீர்க்கதரிசியின் பணியாள் கேயாசியோடு ராஜா பேசிக்கொண்டிருந்தார். “செத்துப் போனவனை (எலிசா) உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது,” எலிசா உயிர்ப்பித்த பிள்ளையின் தாய் உள்ளே வந்தாள் (8:5). அவள் வேண்டுதல் கேட்கப்பட்டது.
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையையும் நன்மைக்காக பயன்படுத்த கர்த்தர் வல்லவராக இருக்கிறார். கர்த்தர் இன்று நமக்கு முன்குறித்திருக்கும் வேலைகளுக்கு, அவரோடு நடக்க கிருபை செய்வாராக.
நம் வாழ்க்கை நம் கைகளில் இருப்பதைவிட ஆண்டவர் கைகளில் இருப்பது சிறப்பாக இருக்கும்.