என் நண்பர் சாட் வையோமிங் பகுதியில் ஒரு வருடம் மேய்ப்பனாக இருந்தார். “ஆடுகள் முட்டாள்தனமானவை. தங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறதோ அதை மட்டும்தான் அவை சாப்பிடும்,” என்று என்னிடம் சொன்னார். “தங்களுக்கு முன்னால் இருக்கும் எல்லா புல்லையும் சாப்பிட்டு முடித்தாலும், புல் இருக்கும் வேறு இடத்தை திரும்பிக்கூட பார்க்காமல், மண்ணை சாப்பிட ஆரம்பிக்கும்.”
அவர் சொன்னதைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். எத்தனை முறை வேதாகமம் மனிதர்களை ஆடுகளுக்கு ஒப்பிடுகிறது என்று நினைத்தேன். அதனால்தான் நமக்கு மேய்ப்பர் தேவைப்படுகிறார். ஆனால், ஆடுகள் முட்டாளாக இருப்பதால், ஏதோ ஒரு மேய்ப்பன் அல்ல, அவற்றின்மீது அக்கறை காட்டும் மேய்ப்பனே தேவை. பாபிலோனில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தேவனின் ஜனங்களுக்கு எசேக்கியேல் கடிதம் எழுதியபோது, மோசமான மேய்ப்பர்களால் நடத்தப்படும் ஆடுகளுக்கு அவர்களை ஒப்பிட்டார். இஸ்ரவேலின் தலைவர்கள் தங்கள் மந்தைகள்மீது அக்கறை கொள்ளாமல், அவைகளைத் தங்கள் சுயநலத்திற்காகவும், ஆதாயம் தேடுவதற்காகவும் பயன்படுத்திக்கொண்டார்கள் (வச. 3). காட்டு விலங்குகள் அவைகளைப் பட்சித்துப்போட அனுமதித்தார்கள் (வச. 5).
ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. நல்ல மேய்ப்பராகிய தேவன் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திய தலைவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற வாக்குக் கொடுத்தார். அவர்களை அவர்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, செழிப்பான புல்வெளிகளில் மேய்த்து, அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக அவர்களுக்கு வாக்களித்தார். காயப்பட்டவைகளை சுகமாக்கி, காணாமல் போனவற்றைத் தேடுவார் (வச. 11-16). தம் மந்தை பாதுகாப்பாக இருக்கும்படியாக, அவர் காட்டு விலங்குகளைத் துரத்துவார் (வச. 28).
தேவனின் மந்தையில் உள்ளவர்களுக்கு அன்பான அக்கறையும், வழிநடத்துதலும் தேவை. நம்மை எப்போதும் பசுமையான புல்வெளிகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு மேய்ப்பரைப் பெற்ற நாம் அவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! (வச. 14).
என் மேய்ப்பரின் சத்தத்தை கேட்க நான் கவனமாக இருக்கிறேனா?