ஒரு பெண் தன்னுடைய நாயை வைத்திருப்பதாக ஒரு மனிதன் அந்தப் பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நாய் அந்த மனிதனுடையதாக இருக்கமுடியாது என்றும், அதை எங்கே வாங்கினாள் என்றும் அந்தப்பெண் நீதிபதியிடம் கூறினாள். நீதிமன்ற அறையில் நீதிபதி நாயை அவிழ்த்து விட்டபோது, அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரிந்தது. தன் வாலை ஆட்டியபடி, நாய் அந்த மனிதனிடம் ஓடியது!

இதேபோன்ற ஒரு பிரச்சனையை, பண்டைய இஸ்ரவேலில் நீதிபதியாக இருந்த சாலொமோன் தீர்த்துவைக்க நேர்ந்தது. ஒரு ஆண் குழந்தைக்கு தான்தான் தாய் என்று இரண்டு பெண்கள் உரிமை கோரினார்கள். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட சாலொமோன், பிள்ளையை இரண்டாகப் பிளந்துகொடுக்க ஒரு பட்டயத்தைக் கொண்டுவரச் சொன்னார். உண்மையான தாய், தன் குழந்தை தனக்குக் கிடைக்காதபோதும், அவன் உயிரைக் காப்பாற்றும்படியாக, அவனை அடுத்த பெண்ணிடம் கொடுக்கும்படி கூறினாள். சாலொமோன் அந்தக் குழந்தையை அவளுக்கே கொடுத்தார்.

எது நியாமானது, எது ஒழுக்கமானது, எது சரி, எது தவறு என்று முடிவெடுக்க நமக்கு ஞானம் அவசியம். ஞானத்தின் அவசியத்தை நாம் முழுவதுமாக உணர்ந்தால், நாமும் சாலொமோனைப் போல, ஆண்டவரிடம் ஞானமுள்ள இருதயத்தைக் கேட்கலாம் (வச. 9). மற்றவர்கள் விருப்பங்களையும் கருத்தில்கொண்டு, நம்முடைய தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்திசெய்ய தேவன் நமக்கு உதவுவார். நம் வாழ்க்கையில் அவரை கனப்படுத்தும்படியாக, சில சமயங்களில் குறுகியகால பலன்களையும், நீண்டகால (சில சமயங்களில் நித்திய) பலன்களையும் ஒப்பிட்டுப் பார்க்கச்செய்வார்.

நம் ஆண்டவர் ஒரு நேர்த்தியான நீதிபதி மட்டுமல்ல, அதிக ஞானத்தைத்தர ஆர்வமாக இருக்கும் தனிப்பட்ட ஆலோசகருமாவார் (யாக். 1:5).