“கிறிஸ்தவர்களுக்கு அநேக வருடங்களில் இது ஒரு கொடிய நாள்” என்று ஒரு செய்திக்குறிப்பு கூறியது. ஏப்ரல் 2017ல் ஞாயிறு ஆராதனையில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆராதனை நடைபெறும் இடத்தில் நடத்தப்படும் கொடூர இரத்தம் சிந்துதலையும், தாக்குதல்களையும் நம்மால் வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தவர்களிடம் நாம் உதவி பெறமுடியும்.
ஆசாப் சங்கீதம் 74ஐ எழுதியபோது, எருசலேமின் பெரும்பான்மையான மக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் அல்லது புகலிடம் தேடி பிற இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தன் மன சஞ்சலத்தை வெளிப்படுத்திய அவர், இரக்கமற்ற அன்னியப் படைகளால் நாசப்படுத்தப்பட்ட தேவாலயத்தைப்பற்றி விவரித்தார். “உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்,” என்று ஆசாப் குறிப்பிட்டார் (வச. 4). “உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்” (வச. 7).
அந்த மோசமான சூழலிலும் சங்கீதக்காரன் நிற்பதற்கு ஒரு இடத்தைக் கண்டுகொண்டான். நாமும் அதேபோல் செய்ய ஊக்குவிக்கப்படுகிறோம். “பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா” என்று கூறுகிறார் (வச. 12). இந்த உண்மையை உணர்ந்துகொண்டதால், அந்த்த் தருணத்தில் தேவனின் இரட்சிப்பு இல்லாததுபோல் தோன்றினாலும், ஆசாப்பால் கர்த்தரின் வல்லமையைத் துதிக்கமுடிந்தது. “உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்” என்று ஆசாப் ஜெபித்தார். “துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும், சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்” (வச. 20-21).
நியாயமும், கிருபையும் இல்லாததுபோல் தோன்றும்போது, தேவனின் அன்பும், வல்லமையும் கடுகளவும் குறைவதில்லை. ஆசாப்போடு “தேவன் என்னுடைய ராஜா” என்று நாமும் நம்பிக்கையோடு சொல்லலாம்.
தேவன் தம் நாமத்திற்காக வழக்காடுவார்.