ஒரு பெரிய அங்காடியில், தான் வாங்கிய பொருள்களுக்குக் கட்டணம் செலுத்துவதற்காக என் தோழி வரிசையில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு முன்னால் நின்றவர் அவளுடைய கட்டணத்தில் 14 டாலர் குறையும் விதமாக ஒரு ரொக்கச்சீட்டைக் கொடுத்தார். சரியாக தூக்கம் இல்லாமல் நின்ற என் தோழிக்கு இந்த நற்செயல் அழுகையை வரவழைத்தது. பின்னர் அழுததை நினைத்து சிரிக்கத் தொடங்கினாள். அதிகம் சோர்வாயிருந்த தருணத்தில், எதிர்பாராத இந்த இரக்கம், அவள் மனதைத் தொட்டு, அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. வேறொரு நபர் மூலமாக தேவன் அவளுக்குக் காட்டிய கிருபைக்காக தேவனுக்கு நன்றி செலுத்தினாள்.
எபேசுவில் உள்ள புறஜாதியாரான கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பவுல் கொடுப்பது குறித்து எழுதுகிறார். கிருபையால் இரட்சிக்கப்பட்டதால், அவர்களுடைய பழைய வாழ்க்கையை ஒழித்து, புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். நாம் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்டு, அவர் “செய்கையாக” இருப்பதால், இந்த இரட்சிக்கும் கிருபையில் இருந்து நற்கிரியைகளைச் செய்ய நமக்கு ஆர்வம் பிறக்கிறது (2:10). அந்த அங்காடியில் உள்ள மனிதனைப்போல, நாமும் நம்முடைய அன்றாட செயல்களின்மூலம் தேவனின் அன்பைப் பகிர முடியும்.
அவருடைய கிருபையைப் பகிர நாம் பொருள்களாகக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய செயல்களின்மூலமும் நாம் அவருடைய அன்பைப் பகிர முடியும். ஒருவர் நம்மோடு பேசும்போது அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்க நேரம் ஒதுக்கலாம். நம்மிடம் பணி புரிபவர்களிடம் ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்கலாம். தேவையில் இருக்கும் ஒருவருக்கு உதவலாம். மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, நாம் சந்தோஷத்தைப் பெறுகிறோம் (அப்போஸ்தலர் 20:35).
நமக்கு அவர் அளித்துள்ள திறமைகளை, வெகுமதிகளை மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலம், தேவனின் அன்பை பகிர்ந்துகொள்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்.