நாட்டுப்புற பாடல்கள், பாரம்பரிய சங்கீதம் என்று எல்லா விதமான பாடல்களையும் ரசிக்க என் பெற்றோர் எனக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே மாஸ்கோ தேசிய இசைக்குழுவின் (Moscow National Symphony) இசை விருந்தைக் கேட்க, ரஷ்யாவின் புகழ்பெற்ற சங்கீத சபைகளில் ஒன்றான மாஸ்கோ கான்ஸர்வேடரியில் (Moscow Conservatory) நான் அடி எடுத்து வைத்தபோது, என் மனம் படபடத்தது. சைக்கோவ்ஸ்கி இயற்றிய ஒரு அழகிய பாடலை சங்கீத வித்துவான்கள் இசைக்கும்படி நடத்துனர் செய்தார். நிகழ்ச்சியின் மையக் கருத்துக்களின் சிறிது சிறிதாக உயர்ந்து, ஆழ்ந்த, வியப்பைத் தரக்கூடிய உச்ச ஸ்தாயினைத்தை எட்டியது. பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து அந்த அழகிய தருணத்தைப் பாராட்டினார்கள்.
வேத வசனங்கள், வரலாற்றின் உச்சமான சிலுவை மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நோக்கி முன்னேறுகின்றன. ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஒரு மீட்பர் வருவார் என்று தேவன் வாக்குக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:15). பழைய ஏற்பாடு முழுவதும் இந்த மையக்கருத்து முன்னோக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். பஸ்கா ஆட்டுக்குட்டியிலும் (யாத்திராகமம் 12:21), தீர்க்கதரிசிகளின் நம்பிக்கையிலும் (1 பேதுரு 1;10), தேவனின் ஜனங்களின் வாஞ்சையிலும் இந்த வாக்குறுதியைப் பார்க்கிறோம்.
இந்தக் கருத்து முன்னோக்கிச் செல்வதை 1 யோவான் 4:14 உறுதிப்படுத்துகிறது: “பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்”. எப்படி? நம்மை மன்னித்து, நம்மைப் படைத்தவரிடம் நம்மை மீட்டுக்கொடுக்க இயேசு மரித்து, உயிர்த்தெழுந்தார். இதன் மூலமாக சிதைந்த உலகை மீட்பதாக தான் கொடுத்த வாக்குறுதியை இயேசு நிறைவேற்றினார். ஒரு நாள் மீண்டும் வந்து, தன்னுடைய படைப்பு அனைத்தையும் சேர்த்துக்கொள்வார்.
தேவ குமாரன் நமக்காக மரித்ததை நினைவுகூரும்போது, அவரின் அருள் மற்றும் மீட்பராகிய இயேசு என்ற அழகிய உச்சத்தைக் கொண்டாடுகிறோம்.
இயேசு என்னும் வெகுமதியைக் கொண்டாடுவோம்!