தேவனின் பார்வைக்கு உகந்தது அல்லாத என்னுடைய பழைய வாழ்க்கையால், நான் பல ஆண்டுகளாக தகுதி இல்லாதவளாக, அவமானமாக உணர்ந்தேன். இந்த உணர்வு என்னுடைய அன்றாட வாழ்க்கையை அதிகமாக பாதித்தது. கறைபடிந்த என் பழைய வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வது? ஒரு ஊழியத்தின் தலைவரை வீட்டிற்கு சாப்பிட அழைக்கும் அளவிற்கு தேவன் எனக்கு தைரியத்தைக் கொடுத்தாலும், நான் முற்றிலும் நல்லவள் என்று காட்டிக்கொள்ள முயன்றேன். வீட்டை நன்றாக சுத்தம் செய்தேன். நல்ல உணவு சமைத்தேன். இருப்பதில் மிக நல்ல உடையை அணிந்துகொண்டேன்.
அதன் பின் முற்றத்தில் தண்ணீர் பாய்ச்ச உபயோகித்த தெளிப்பானை அணைக்கச் சென்றேன். தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்த குழாயைத் திருப்பியபோது, ஏதோ தவறாகி, தண்ணீர் என் மீது தெறித்து, என் உடை முழுவதும் நனைந்துபோனது. வீட்டிற்குள் போய் தலையைத் துவட்டி, வீட்டில் அணியும் ஒரு சாதாரண உடைக்கு மாறியபோது, சரியாக அழைப்பு மணி ஒலித்தது. சலித்துப்போய், உடைமாற்றும்படி நடந்த சம்பவத்தையும், எதற்காக எல்லாம் நல்ல முறையில் காட்சி அளிக்கவேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டேன். என் புது தோழி, தன் பழைய வாழ்க்கையினால் தனக்கு ஏற்படும் பயம், பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றுடனான போராட்டங்களைப் பற்றிக்கூறினாள். நாங்கள் ஜெபித்தபிறகு, குறைபாடுள்ள ஊழியக்காரரைக் கொண்ட தன் குழுவில் சேரும்படி என்னை அழைத்தாள்.
பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்துவுக்குள்ளான புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டபோது, தன்னுடைய பழைய வாழ்க்கையை மறைக்கவும் இல்லை, ஆண்டவரை சேவிப்பதற்கு அதை ஒரு இடையூறாகவும் கருதவில்லை (1 தீமோத்தேயு 1:12-14). சிலுவையில் கிறிஸ்துவின் மரணம், பாவிகளில் பிரதான பாவியாகிய தன்னை இரட்சித்ததையும், மாற்றியதையும் அவர் அறிந்தார். அதனால் அவர் தேவனைத் துதித்ததோடு, அவரைக் கனம்பண்ணவும், அவருக்குக் கீழ்ப்படியவும், மற்றவர்களையும் ஊக்குவித்தார் (வச. 15-17).
தேவனின் கிருபையையும், மன்னிப்பையும் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நம்முடைய பழைய வாழ்க்கையில் இருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம். குறைபாடுள்ளவர்களானலும், அதிகமாக நேசிக்கப்படும் நாம், தேவன் நமக்குக் கொடுத்த திறமைகளுடன் மற்றவர்களை சேவிக்கும்போது, நம்முடைய உண்மையான முகங்களைக் குறித்து அவமானப்படவேண்டிய அவசியம் இல்லை.
நாம் இருக்கிறபடியே தேவன் நம்மை ஏற்றுக்கொள்கிறார். அன்புடன் நாம் அவருக்கு ஊழியம் செய்யும்போது நம்மை மாற்றுகிறார்.