பல ஆண்டுகளாக தன் பாடங்களைப் படிக்க அதிக சிரமப்பட்ட ஏஞ்சி அவள் படித்துக்கொண்டிருந்த மிகச்சிறந்த, பிரத்தியேக பள்ளியில் இருந்து, ஒரு “சாதாரண” பள்ளிக்கு மாற்றப்பட்டாள். அதிக போட்டி மிகுந்த சிங்கப்பூரின் பள்ளிக்கல்வியில், “நல்ல” பள்ளியில் படிப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்றாலும், இந்த சம்பவத்தை பலர் ஒரு தோல்வியாகக் கருதுவார்கள்.
ஏஞ்சியின் பெற்றோர் அதிக ஏமாற்றம் அடைந்தார்கள். ஏஞ்சியும் தன் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டதாக உணர்ந்தாள். ஆனால் புதிய பள்ளியில் சேர்ந்த சில நாள்களிலேயே சாதாரண பிள்ளைகள் மத்தியில் படிப்பது எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள். “அம்மா, இதுதான் எனக்கு ஏற்ற இடம்,” என்றாள். “இங்குதான் என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!”
இயேசு சகேயுவின் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்தபோது, அந்த ஆயக்கார தலைவர் எப்படி உணர்ந்திருப்பார் (லூக்கா 19:5) என்பதை ஏஞ்சி குறித்த சம்பவம் எனக்கு நினைவுபடுத்தியது. தங்களிடம் குறை உண்டு என்றும் தங்களுக்கு தேவனின் கிருபை பெற தகுதி இல்லை என்றும் உணர்ந்தவர்களுடன் சாப்பிடுவதை கிறிஸ்து விரும்பினார். நம்மைக் கண்டுகொண்டு, நாம் இருக்கிறபடியே நம்மை நேசிக்கும் இயேசு, அவரின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின்மூலம் பூரணத்துவத்தைத் தருவதாக நமக்கு உறுதி அளிக்கிறார். அவர் கிருபையினால் மட்டுமே நாம் மாசற்ற முழுநிறைவைப் பெறமுடியும்.
இயேசுவின் நேர்த்தியான தன்மையிலிருந்து நான் குறைவாகவே காணப்படுகிறேன் என்பதை நான் அறிவதால், பல வேளைகளில் என் ஆவிக்குரிய பயணம் ஒரு கடினமான பயணமாகவே இருக்கிறது. நாம் இருக்கிறபிரகாரமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம். ஏனென்றால், நாம் இயேசுவைப் போல மாற, பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பண்படுத்துகிறார்.
நாம் பூரண குணம் கொண்டவர்கள் கிடையாது. ஆனாலும் அவர் நம்மை நேசிக்கிறார்.