சமீபத்திய விடுமுறைப் பயணத்தின்போது, நானும் என் மனைவியும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு அரங்கைப் பார்க்கச் சென்றோம். அரங்கின் வாயில்கதவு நன்றாக திறந்து இருந்ததால், பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டோம். அந்தத் திடலையும், அழகாகப் பராமரிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களையும் பார்த்து ரசித்தோம். நாங்கள் பார்த்து முடித்தபோது, ‘இந்த மைதானத்திற்குள் வர உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று ஒருவர் சற்றுக் கடுமையாகக் கூறினார். அவர் அப்படிக் கூறியது நாங்கள் வெளி ஆட்கள் என்று உணர்த்தி, எங்களுக்கு வருத்தத்தைத் தந்தது.  

அந்த விடுமுறையின்போது ஒரு தேவாலயத்திற்கும் சென்றோம். ஆலயத்தின் வாசலும் முழுதும் திறந்திருந்ததால் நாங்கள் உள்ளே சென்றோம். ஆனால் என்ன ஒரு வித்தியாசம்! பலர் எங்களை அன்பாக வரவேற்றனர். நாங்கள் வெளி ஆட்கள் என்ற உணர்வே இல்லை. ஆலய ஆராதனை முடிந்தபோது, எங்களை அங்கே இருந்தவர்கள் அன்போடு ஏற்றுக்கொண்டார்கள் என்ற உணர்வுடன் வெளியே வந்தோம்.    

ஆனால் பல சமயங்களில் “உங்களுக்கு இங்கே அனுமதி இல்லை” என்ற உணர்வை ஆலயத்திற்கு வருபவர்கள் பெறும்படியாக இருக்கிறது என்பது மிக வருத்தமான உண்மை.  ஆனால் வேதாகமம் நாம் அனைவரையும் உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது. இயேசு நம்மைப் போல நாம் பிறரையும் நேசிக்கவேண்டும் என்று கூறுகிறார். அவர்களை உபசரித்து, நம் வாழ்வில், நம் தேவாலயங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே அது குறிக்கிறது (மத்தேயு 22:39). எபிரேயரில் “அந்நியரை உபசரிக்கும்படி” அழைக்கப்படுகிறோம் (13:2). சமூகத்தில் பின் தங்கியவர்கள், மற்றும் உடல் ஊனமுற்றவர்களிடத்தில் அன்பாக இருக்கும்படி லூக்காவும், பவுலும் நம்மை அறிவுறுத்துகிறார்கள் (லூக்கா 14:13-14; ரோமர் 12:13). விசுவாசிகளிடத்தில் அன்பு செலுத்த நமக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது (கலாத்தியர் 6:10).     

கிறிஸ்துவைப் போல் நாம் அனைத்து மக்களையும் உபசரிக்கும்போது, நமது இரட்சகரின் அன்பையும், பரிவையும் நாம் பிரதிபலிக்கிறோம்.