அன்பென்னும் மரபுரிமை
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு 5:16
என் கொள்ளுப்பாட்டியின் வேதாகமத்தை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. ஒரு குழந்தையின் கையெழுத்தில் “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்” (மத். 5:3-4) என்ற வசனங்கள் எழுதப்பட்ட ஒரு சிறிய காகிதம் அந்த வேதாகமத்தில் இருந்து விழுந்தது. அந்த வசனங்களுக்குப் பக்கத்தில் தடுமாற்றத்துடன் எழுதப்பட்ட என் அம்மாவின் கையெழுத்து இருந்தது.
வசனங்களைப் படித்து, அவற்றை மனனம் செய்ய ஏதுவாக, தன் பேரப்பிள்ளைகளுக்கு வேதாகம வசனங்களை எழுதக் கற்றுக்கொடுப்பது என் கொள்ளுப்பாட்டியின் வழக்கமாக இருந்தது. அந்த காகிதத்தைப் பார்த்தவுடன், அதன் பின்னணி என் நினைவுக்கு வந்து, என் கண்களில் கண்ணீர் வந்தது. என் அம்மா சிறுமியாக இருந்தபோது, என் தாத்தா இறந்துவிட்டார். என் அம்மாவின் தந்தை இறந்த சில வாரங்களிலேயே அவரது தம்பியும் (என் மாமா) இறந்துபோனார். இந்த துயரமான சூழ்நிலையில் என் கொள்ளுப்பாட்டி, என் அம்மாவுக்கு இயேசு கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய சமாதானம் பற்றி எடுத்துக்கூறினார்.
“அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்,” (2 தீமோத்தேயு 1:5) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார். விசுவாசம் என்பது பரம்பரையாய் வரும் சொத்து அல்ல. அது பகிரப்படுவது. தீமோத்தேயுவின் பாட்டியும், அம்மாவும் தங்கள் விசுவாசத்தை அவருடன் பகிர்ந்துகொண்டார்கள். அவரும் விசுவாசித்தார்.
இயேசுவில் நம்பிக்கை வைக்கும்படி நமக்கு நெருக்கமானவர்களை நாம் ஊக்குவிக்கும்போது, நாம் அன்பு என்னும் பரம்பரைசொத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம். என் கொள்ளுப்பாட்டி தன் இரட்சகர் மீது வைத்திருந்த அன்பின் சாட்சியாக என் அம்மாவின் சிறு காகிதக் குறிப்பு இருந்தது. நமக்குப் பின் வருபவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவது எத்தனை நன்மையானது.
ஜெபிக்க சரியான முறை
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
மத்தேயு 6:6
ஜெப விண்ணப்பங்களை சிலர் குறிப்பேட்டில் எழுதிவைப்பார்கள். தினமும் உபயோகிப்பதால் அவை கிழிந்த நிலையில் இருக்கும். சிலர் ஒவ்வொரு ஜெபத்தையும், ஒவ்வொரு துதியையும் எழுதி, அந்தப் பட்டியலைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கும். மற்றவர்களோடு சேர்ந்து ஜெபிப்பவர்கள், மற்றும் தங்கள் கட்டில் அருகே தரைவிரிப்பு தேய்ந்துபோகும் அளவுக்கு முழங்கால்படியிட்டு ஜெபிப்பவர்களால் நான் அதிக ஊக்கம் பெறுகிறேன். நானும் அவர்களைப்போல ஜெபம் செய்ய பல ஆண்டுகள் முயன்றேன். ஒரு நிறைவான ஜெப வாழ்க்கையை விரும்பினேன். என்னைவிட நன்றாகப் பேசக்கூடியவர்களைப் போல நானும் பேச முயற்சி செய்தேன். ஜெபிப்பதற்கு சரியான முறையைத் தெரிந்துகொள்ள அதிக வாஞ்சையாக இருந்தேன். அதை ஒரு புதிராக நினைத்து, அதற்கு விடை காண முயற்சி செய்தேன்.
இறுதியில் நம் ஆண்டவர் நம்மைத் தாழ்த்தும் ஒரு ஜெபத்தையே விரும்புகிறார் என்று தெரிந்துகொண்டேன் (மத்தேயு 6:5). ஒரு நெருங்கிய உரையாடலுக்கு அவர் நம்மை அழைக்கிறார், அதைக் கேட்பதாக வாக்குக்கொடுக்கிறார். (வச. 6). மனனம் செய்த வார்த்தைகளோ, வாக்கியங்களோ, கற்பனை வளமுள்ள வார்த்தைகளோ அவருக்குத் தேவை இல்லை (வச. 7). ஜெபம் என்பது ஒரு வெகுமதி, அவரது மாட்சிமையை கனப்படுத்த ஒரு வாய்ப்பு (வச. 9-10), அவர் நமக்கு முன்குறித்திருப்பதில் நாம் காட்டும் நம்பிக்கை (வச. 11), அவர் அளிக்கும் மன்னிப்பு மற்றும் வழிகாட்டுதலில் நமக்கு இருக்கும் உறுதி (வச. 12-13)என்று கூறுகிறார்.
நம் வார்த்தைகளிலும், நம் எண்ணங்களிலும் இருக்கும் ஜெபங்களையும், நம் கன்னங்களில் கண்ணீராக வழியும் அமைதியான ஜெபங்களையும் கேட்பதாகவும், கரிசனை கொள்வதாகவும் கர்த்தர் நமக்கு உறுதி அளிக்கிறார். கர்த்தர் மீதும், அவர் அன்பின்மீதும் நாம் நம்பிக்கை வைக்கும்போது, அவரை மட்டுமே சார்ந்து இருக்கும் தாழ்மையான இருதயத்தை ஒப்புவித்து ஜெபிப்பதே சரியான ஜெபம் என்பதை புரிந்துகொள்வோம்.
உங்களுக்கு நல்லதா?
எனக்கு கசப்பான சாக்லெட் பிடிக்கும் என்பதால், ஒரு முறை “கசப்பான அடர் நிற சாக்லெட் நல்லதா” என்று இணையத்தில் தேடினேன். பல வகையான பதில்கள் கிடைத்தன – அவற்றில் சில நல்ல பதில்கள், சில மோசமான பதில்கள். எந்த விதமான உணவு பதார்த்தத்துக்கும் இது போல் நம்மால் இணையத்தில் தேடமுடியும். பால் உங்களுக்கு நல்லதா? காஃபீ உங்களுக்கு நல்லதா? சாதம் நல்லதா? இது போன்ற கேள்விகளுக்கு தலைசுற்றும் அளவுக்கு பதில்கள் குவிந்து கிடக்கின்றன. அதனால் இப்படித் தேடுவதே உங்களுக்கு நல்லதா என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது தலைவலியை வரவழைக்கக்கூடும்!
ஆனால் உங்களுக்கு 100 சதவீதம் நல்லதை எதையாவது தேடுகிறீர்கள் என்றால், நான் பரிசுத்த வேதாகமத்தை உங்களுக்குப் பரிந்துரை செய்வேன். தேவனுடன் நல்ல உறவை ஏற்படுத்த விரும்பும், கிறிஸ்துவைப் பின்பற்றும் மக்களுக்கு அது என்ன செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.
நீங்கள் பரிசுத்தமாய் இருக்க உதவும் (சங். 119:9, 11).
உங்களை ஆசீர்வதிக்கும் (லூக். 11:28).
உங்களை ஞானமுள்ளவர்களாக மாற்றும் (மத். 7:24).
ஒளியையும், புரிந்துகொள்ளுதலையும் தரும் (சங். 119:130).
நீங்கள் ஆவியில் வளர உதவும் (I பேது. 2:2).
நம் ஆண்டவர் நல்லவர். “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்” என்று சங்கீதம் 145:9 கூறுகிறது. அந்த தயவால், அவரை நேசிக்கும் அனைவரும் கர்த்தர்வுடன் உள்ள உறவை மேம்படுத்துவதற்கு உதவ, நமக்கு ஒரு வழிகாட்டியைக் கொடுத்துள்ளார். தேர்ந்தெடுக்க அநேக விஷயங்கள் இந்த உலகில் இருக்கும்போது, அவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுத்து நாம் வாழ முயற்சிக்கும்போது, நமக்கு எது நல்லது என்று வேதாகமத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதற்காக அவரைத் துதிப்போம். சங்கீதக்காரரோடு சேர்ந்து “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங். 119: 103) என்று நாமும் சொல்லுவோம்.
அதிகபட்ச திருப்தி
வேதாகமப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் சிற்றுண்டி வினியோகித்தபோது, ஒரு சிறுவன் தனது சிற்றுண்டியை அவசரமாக விழுங்கினான். பின், தன் மேஜையில் அமர்ந்து சாப்பிட்ட சிறுவர்கள் மீதம் வைத்திருந்ததையும் சாப்பிட்டான். ஒரு கவரில் நான் பாப்கார்ன் கொடுத்த பிறகும் அவன் திருப்தி அடையவில்லை. அந்த நிகழ்ச்சியின் தலைவர்களாக, அந்தச் சிறுவன் ஏன் அவ்வளவு பசியாக இருக்கிறான் என்று சிறிது கவலைப்பட்டோம்.
நமது உணர்ச்சிகளைப் பொறுத்தவரை, நாமும் அந்தச் சிறுவனைப் போலவே இருக்கிறோம் என்று தோன்றியது. நமது ஏக்கங்களை திருப்திப்படுத்த என்ன வழி என்று யோசிக்கிறோம். ஆனால் எது நம்மை முழுவதுமாக திருப்திப்படுத்துகிறது என்பதை நாம் கண்டு பிடிப்பதேயில்லை.
“நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்” (ஏசாயா 55:1) என்று ஏசாயா தீர்க்கதரிசி நம்மை அழைக்கிறார். ஆனால் “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?” (வச. 2) என்றும் கேட்கிறார். சரீரப் பிரகாரமான பசியைப் பற்றி மட்டும் அவர் இங்கே குறிப்பிடவில்லை. தம் பிரசன்னம் கூட இருக்கும் என்று தேவன் கொடுத்த வாக்குறுதி மூலமாக, அவர் நம் ஆத்தும, உணர்வுப் பசிகளை தீர்க்கமுடியும். மூன்றாம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நித்திய உடன்படிக்கை” கர்த்தர் தாவீதுக்கு 2 சாமுவேல் 7:8-16ல் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்துகிறது. தாவீதின் பரம்பரையிலே, மக்களை கர்த்தரோடு இணைப்பதற்காக ஒரு இரட்சகர் தோன்றுவார். பின்னர் யோவான் 6:35, 7:37 ஆகிய வசனங்களில் ஏசாயா கொடுத்த அதே அழைப்பை இயேசுவும் கொடுக்கிறார். இதன்மூலம் ஏசாயாவும், மற்ற தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்த இரட்சகர் தானே என்று வெளிப்படுத்துகிறார்.
பசியாய் இருக்கிறீர்களா? அவரது சமூகத்தில் வந்து நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி தேவன் உங்களை அழைக்கிறார்.
பெயரில் என்ன இருக்கிறது?
“கிப்” ஹார்டின் என்ற மெதடிஸ்ட் சபைப் போதகர், பிரபல பிரசங்கியார் ஜான் வெஸ்லியைப் போல் தன் மகன் வரவேண்டும் என்ற ஆசையில், அவரது ஆண் குழந்தைக்கு ஜான் வெஸ்லி என்று பெயர் வைத்தார். ஆனால், அதே பெயர் கொண்ட பிரசங்கியார் போல் அல்லாமல், ஜான் வெஸ்லி ஹார்டின் ஒரு மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தார். நாற்பத்தி இரண்டு மனிதர்களைக் கொன்றதாகக் கூறிய அவன் 1800 ஆண்டு காலக் கட்டத்தில், அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் துப்பாக்கிச் சண்டைக்காரனாக, பொல்லாத துஷ்டனாக இருந்தான்.
தற்போது உள்ள கலாசாரத்தைப்போல வேதாகமத்திலும் பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆண்டவருடைய குமாரனின் பிறப்பை முன்னறிவித்த தேவதூதன், மரியாளின் குழந்தைக்கு “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21) என்று யோசேப்பிடம் கூறுகிறார். இயேசுவின் பெயருக்கு அர்த்தமான “யெகோவா இரட்சிப்பார்”, பாவத்திலிருந்து இரட்சிப்பதற்கான அவரது குறிக்கோளை உறுதிப்படுத்தியது.
ஹார்டினைப் போல் இல்லாமல், இயேசு, முழுவதுமாக தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, மீட்பு என்ற அவரது குறிக்கோளை நிறைவேற்றினார். “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவா. 20:31) என்று கூறியதன்மூலம், வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் பெயரை யோவான் உறுதிப்படுத்துகிறார். அப்போஸ்தலர் நடபடிகள் “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12) என்று கூறி நம் அனைவரையும் அவரை விசுவாசிக்கும்படி அழைக்கிறது.
இணையில்லாத இயேசுவின் நாமத்தை விசுவாசத்தோடே தேடும் அனைவரும், அவர் தரும் மன்னிப்பையும், நம்பிக்கையையும் அனுபவிக்க முடியும். நீங்கள் அவர் நாமத்தைத் தேடினீர்களா?