எதிர்பாராத வழிகள்
இங்கிலாந்தில் ஜெர்ஸி மிருகக்காட்சி சாலையில் உள்ள 20 அடி உயரம்கொண்ட கொரில்லா வேலித் தடுப்புக்குள், 1986ஆம் ஆண்டு ஐந்து வயது லெவன் மெரிட் விழுந்துவிட்டான். அவன் பெற்றோர்களும், பார்வையாளர்களும் உதவி வேண்டித் தவித்தபோது, ஜம்போ என்ற சில்வர்பேக் வகை ஆண் கொரில்லா அசைவற்றுக் கிடந்த சிறுவனுக்கும் மற்ற கொரில்லாக்களுக்கும் நடுவே பாதுகாப்பாக நின்றுகொண்டது. பின்பு சிறுவனின் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தது. லெவன் அழ ஆரம்பித்தபோது, மிருகக்காட்சி சாலை ஊழியர்களும், மருத்துவ ஊர்தி ஓட்டுநரும் அவனைக் காப்பாற்றுவதற்கு வசதியாக, ஜம்போ மற்ற கொரில்லாக்களை தங்கள் தடுப்புப்பகுதிக்குள் போகச்செய்தது. முப்பது ஆண்டுகள் ஆனபிறகும், மென்மையான ஜம்போ ஒரு பாதுகாவலனாக தன்னை காத்துக்கொண்டதையும், எதிர்பாராத விதமாக நல்ல முறையில் நடந்துகொண்டதையும், இன்றும் லெவன் ஆச்சரியமாகப் பேசுகிறார். அந்த நிகழ்ச்சி கொரில்லாக்கள் குறித்த அவர் கண்ணோட்டத்தை மாற்றியது.
கர்த்தர் எப்படி நடந்துகொள்வார் என்ற எலியாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கர்த்தாதி கர்த்தர், கன்மலைகளை உடைக்கக்கூடிய பெருங்காற்று மூலமாகவும், பூமி அதிர்ச்சி மூலமாகவும், அக்கினி மூலமாகவும், தன்னைப்பற்றி எப்படி நினைக்கக்கூடாது என்பதை எலியாவுக்கு உணர்த்தினார். அதன்பின், அமர்ந்த மெல்லிய சத்தம் மூலம் கர்த்தர் தன் இருதயத்தையும், தன் பிரசன்னத்தையும் உணர்த்தினார் (I இராஜாக்கள் 19:11-12).
எலியா இதற்குமுன் கர்த்தரின் வல்லமையைப் பார்த்திருக்கிறார் (18:38-39). ஆனால் மகத்துவமான, பயத்தைத் தரக்கூடிய கடவுள்களையும் விட மேலானவராக அறியப்பட விரும்பும் கர்த்தரை அவர் முழுவதுமாக புரிந்துகொள்ளவில்லை (19:10, 14).
இறுதியில், அமர்ந்த மெல்லிய சத்தத்தின் அர்த்தம் வல்லமை நிறைந்த, மென்மையான இயேசுவில் வெளிப்பட்டது. இயேசு “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று சொன்னார். பின்பு அவர் சிலுவையில் அறையப்பட அமைதியாக தன்னை ஒப்புக்கொடுத்தார் – நம்மை நேசிக்கும் ஆண்டவரின் எதிர்பாராத, கருணை நிறைந்த செயலாகும்.
நம்பிக்கை எங்கே கிடைக்கும்
எலிசபெத் போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாகி நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டாள். அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டபோது, அவள் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாள். சிறு குறிப்புகளை எழுதி, தன் பெயர் போடாமல், தன் ஊரில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிடுவாள். கார்களின் முன்புறம் சொருகி வைப்பதோடு, பூங்காக்களில் உள்ள கம்பங்களில் ஒட்டி வைப்பாள். முன்பு அவள் நம்பிக்கை தரும் வார்த்தைகளைத் தேடுவாள். அதனால் தன்னைப்போல் தேடும் மற்றவர்களுக்காக அவற்றை எழுதி வைக்கிறாள். அவள் எழுதிய குறிப்பு ஒன்று “அன்புடன், நம்பிக்கையை அனுப்புகிறேன்” என்ற வார்த்தைகளோடு முடிந்தது.
நம்பிக்கை, அன்பு – இதையே இயேசு தருகிறார். அவர் ஒவ்வொரு நாளும் தம் அன்பைத் தருவதோடு, நம்பிக்கையால் நம்மை பலப்படுத்துகிறார். அவரது அன்பு துளித்துளியாக அளந்து கொடுக்கப்படாமல், அவரது இருதயத்திலிருந்து பெருக்கெடுத்து நமது இருதயங்களில் ஊற்றப்படுகிறது. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5). நமது கஷ்டங்களின்மூலம் பொறுமையையும், நற்பண்புகளையும் நாம் பெற்றுக்கொள்ள அவர் விரும்புவதோடு, நமக்கு நம்பிக்கை மிகுந்த திருப்தியான வாழ்க்கையைத் தர விரும்புகிறார். நாம் அவரைவிட்டு தூரமாயிருந்தாலும், அவர் நம்மை நேசிக்கிறார் (வச. 6-8).
நீங்கள் நம்பிக்கை தரும் அடையாளங்களைத் தேடுகிறீர்களா? அவருடனான உறவில் வளர, நம்மை அழைப்பதன்மூலம், கர்த்தர் நமக்கு நம்பிக்கையையும், அன்பையும் தருகிறார். நிறைவான வாழ்க்கை வேண்டும் என்ற நம் நம்பிக்கை, நம்மை எப்போதும் கைவிடாத அவர் அன்பில் வேரூன்றி இருக்கிறது.
சரியான நேரம்
என் முதல் பிள்ளையை கல்லூரிக்கு அனுப்புவதற்காக நேற்று நான் விமான டிக்கெட் வாங்கினேன். விமானத்தைத் தேர்வு செய்வதற்குள் நான் சிந்திய கண்ணீரால் அதிகம் நனைந்தாலும், என் கணினியின் விசைப்பலகை (keyboard) வேலை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக அனுதின வாழ்க்கையை அவளோடு அனுபவித்ததை நினைக்கும்போது, அவள் என்னை விட்டு கல்லூரிக்குச் செல்வது அதிகக் கவலையைத் தருகிறது. ஆனாலும், அவள் பிரிவு கஷ்டமாக இருக்கும் என்கிற காரணத்துக்காக அவளுக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை இழக்கச் செய்யமாட்டேன். அவளது வாழ்வின் இந்தத் தருணத்தில், அவள் தன் பயணத்தைத் தொடங்கி, புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், இந்த தேசத்தின் மற்றொரு பகுதியை அறிந்துகொள்வதும் மிகச் சரியான விஷயமாகும்.
குழந்தை வளர்ப்பின் ஒரு பகுதி முடியும் இந்த சமயத்தில், இன்னொரு பகுதி தொடங்குகிறது. அதுவும் புதிய சவால்களும், புதிய சந்தோஷங்களும் நிறைந்ததாக இருக்கும். இஸ்ரவேலின் மூன்றாவது இராஜாவான சாலொமோன் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி 3:1) என்று கர்த்தர் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருப்பதைச் சொல்கிறார். நம் வாழ்வில் நேரிடும் சம்பவங்கள் – அவை நமக்கு சாதகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், மனிதராகிய நமக்கு அவற்றின் மேல் எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் தன் மிகுந்த வல்லமையால், கர்த்தர் “சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்ச் செய்கிறார்” (வச. 11).
மனதுக்கு சஞ்சலமான சமயங்களில், அதிலிருந்து நன்மையைத் தருவார் என்று நாம் கர்த்தரை நம்பலாம். நமது வசதிகளும், நமது சந்தோஷங்களும் மாறி மாறி வரலாம். ஆனால் தேவன் செய்வது “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). சில பருவங்களை நாம் ரசிக்க முடியாமல் இருக்கலாம். சில, மிகுந்த வேதனை அளிப்பவையாக இருக்கலாம். ஆனாலும் அவற்றையும் தேவன் அழகுபெறச் செய்ய முடியும்.
அவர் உள்ளங்கைகளில் வரையப்பட்டிருக்கிறோம்
சார்ல்ஸ் ஸ்பர்ஜன் 1800ஆம் ஆண்டை ஒட்டிய காலக்கட்டத்தில் லண்டன் தேவாலயத்தில் “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” என்ற ஆழ்ந்த பொருள் நிறைந்த ஏசாயா 49:16ஆம் வசனத்தைப் பிரசங்கிப்பதை அதிகம் விரும்பினார். “இந்த வசனத்தை நூற்றுக்கணக்கான தடவை பிரசங்கிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வசனம் ஒரு பொக்கிஷம் போன்றதாக இருப்பதால், நாம் இதை மீண்டும் மீண்டும் தியானிக்க முடியும்.
கர்த்தர் இஸ்ரவேலுக்கும், தம் ஜனத்திற்கும் கொடுத்த வாக்குத்தத்தம், மற்றும் பிதாவின் குமாரனாகிய கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்தது ஆகியவற்றிற்கு உள்ள அழகான தொடர்பை ஸ்பர்ஜன் சுட்டிக்காட்டுகிறார். “அவர் கைகளில் உள்ள காயங்கள் என்ன?... வரைவதற்கு, செதுக்குபவர் ஆணியையும், கத்தியையும் பயன்படுத்தினார். உண்மையிலேயே அவரது ஜனம், அவரது உள்ளங்கைகளில் வரையப்பட, அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும்”, என்று ஸ்பர்ஜன் குறிப்பிடுகிறார். தம் ஜனத்தை, தம் உள்ளங்கைகளில் வரைய தேவன் வாக்குக் கொடுத்தபடியால், நாம் நம் பாவத்தில் இருந்து விடுவிக்கப்படும்படியாக, இயேசு தன் கரங்களை சிலுவையில் நீட்டி, ஆணிகளைத் தன் கரங்களில் அடிக்கப்பெற்றார்.
ஆண்டவர் நம்மை மறந்துவிட்டார் என்று எப்போதாவது நாம் நினைக்க நேர்ந்தால், தேவன் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நம் நினைவுக்கு வர, நம் உள்ளங்கைகளைப் பார்த்தாலே போதும். நமக்காக அவர் தமது கைகளில், அழிக்கமுடியாத தழும்பைப் பெற்றுள்ளார். நம்மை அந்த அளவுக்கு அவர் நேசிக்கிறார்.