ஓவியரும், மிஷனரி ஊழியருமான லிலியஸ் ட்ராட்டர் இறப்பதற்கு முன், தன் ஜன்னல் வழியாக பரலோக ரதம் ஒன்றை தரிசனமாகக் கண்டாள். அவளது நண்பர் “அநேக அழகான காரியங்களைக் காண்கிறாயா?” என்று கேட்டதாகவும், “ஆம், அநேகம், அநேகமான அழகான காரியங்களைக் காண்கிறேன்” என்று லிலியஸ் பதில் சொன்னதாகவும், அவளது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ட்ராட்டரின் வாழ்க்கையில் தேவனின் பங்கை அவளது கடைசி வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. அவளது இறப்பில் மட்டுமல்லாது, அவளது வாழ்க்கை முழுவதும் கர்த்தர் பல அழகிய காரியங்களை அவளுக்கும், அவள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். ஒரு திறமை மிக்க ஓவியராக இருந்தாலும், கிறிஸ்துவை சேவிக்க, அல்ஜீரியாவில் மிஷனரியாகப் பணி செய்ய முடிவு செய்தாள். அவளது இந்த முடிவைக் குறித்து, அவளுக்கு ஓவியக்கலையைக் கற்றுக்கொடுத்த ஜான் ரஸ்கின் என்ற புகழ்பெற்ற ஓவியர் “திறமையை வீணடிக்கிறாள்” என்று கூறினார்.
இதேபோல், புதிய ஏற்பாட்டில், குஷ்டரோகியான சீமோன் வீட்டிற்கு வந்த ஒரு பெண் வெள்ளைக்கல் பரணியில் கொண்டுவந்த நளத தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றியபோது, அருகில் இருந்தவர்கள் அதை வீண் என்று நினைத்தார்கள். விலையுயர்ந்த அந்தத் தைலமானது, ஒரு ஆண்டிற்குக் கிடைக்கும் கூலிக்கு சமானமாக இருந்ததால், அதை எளியவர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாம் என்று அங்கிருந்த சிலர் நினைத்தார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பாராட்டிய இயேசு கிறிஸ்து “என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” என்று கூறினார் (மாற்கு 14:6).
தினந்தோறும் கிறிஸ்துவின் ஒளி நம் வாழ்க்கையில் ஒளிவீசவும், அவரது அருமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் நாமும் முடிவெடுக்கலாம். சிலருக்கு அது ஒரு வீணான காரியமாகத் தோன்றலாம். ஆனால் நாம் சுயவிருப்பத்தோடு அவரை சேவிப்போமாக. அவருக்கு நாம் அநேக அழகிய காரியங்களைச் செய்திருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து சொல்வாராக.
தேவனுடைய அழகை, நம் வாழ்க்கை வெளிப்படுத்தட்டும்.