“நாம் இந்த வழியாகப் போகவேண்டும்” என்று என் மகனின் தோளைத் தட்டிச் சொன்னேன். கூட்டத்தில் அவன் போகவிருந்த திசையிலிருந்து அவனை மாற்றி, அவன் அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும் பின்னால் போகச் சொன்னேன். நாங்கள் குடும்பமாகச் சென்றிருந்த உல்லாசப் பூங்காவில், இதையே பலமுறை அவனிடம் கூறினேன். சோர்வடைந்திருந்த அவன் கவனம் எளிதில் சிதறியது. அவர்களை அவன் பின் தொடர்ந்து போனால் என்ன? என்று நினைத்தேன்.
நானும் இதையே எத்தனை தடவை செய்கிறேன்? எத்தனை தடவை கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவரோடு நடக்காமல், எத்தனை தடவை கர்த்தருடைய வழிகளைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, என் சுய ஆசைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன், என்று அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
இஸ்ரவேலுக்காக கர்த்தர் ஏசாயா மூலம் சொன்ன வார்த்தைகளை யோசித்துப்பாருங்கள்: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21). அதே அதிகாரத்தின் முன்பகுதியில் கர்த்தர் தம் ஜனங்களின் கீழ்ப்படியாமையும், எதிர்ப்பையும் கடிந்து கொண்டார். ஆனால் அவர்கள் மனந்திரும்பி தங்கள் சுய வழிகளின்மேல் அல்லாமல், கர்த்தரின் பெலத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் (வச. 15), கர்த்தர் தன் இரக்கத்தையும், மன உருக்கத்தையும் காண்பிப்பதாக வாக்குக் கொடுத்தார் (வ. 18).
தம் ஆவியின் மூலமாக நம்மை வழிநடத்துவதாக கர்த்தர் கொடுத்த வாக்குறுதி, அவரது இரக்கத்தின் வெளிப்பாடாகும். நமது விருப்பங்களை அவரிடத்தில் எடுத்துக்கூறி, நமக்கு என்ன முன்குறித்திருக்கிறார் என்பதை நாம் ஜெபத்தில் கேட்கும்போது அது நடந்தேறும். நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது தேவன் பொறுமையாக, ஒவ்வொரு நாளும், படிப்படியாக, நம்மை வழிநடத்துவதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.
கர்த்தரை நம்பி, அவர் சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது அவர் நம்மை பொறுமையாக வழிநடத்துகிறார்.