எலிசபெத் போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாகி நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டாள். அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டபோது, அவள் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாள். சிறு குறிப்புகளை எழுதி, தன் பெயர் போடாமல், தன் ஊரில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிடுவாள். கார்களின் முன்புறம் சொருகி வைப்பதோடு, பூங்காக்களில் உள்ள கம்பங்களில் ஒட்டி வைப்பாள். முன்பு அவள் நம்பிக்கை தரும் வார்த்தைகளைத் தேடுவாள். அதனால் தன்னைப்போல் தேடும் மற்றவர்களுக்காக அவற்றை எழுதி வைக்கிறாள். அவள் எழுதிய குறிப்பு ஒன்று “அன்புடன், நம்பிக்கையை அனுப்புகிறேன்” என்ற வார்த்தைகளோடு முடிந்தது.
நம்பிக்கை, அன்பு – இதையே இயேசு தருகிறார். அவர் ஒவ்வொரு நாளும் தம் அன்பைத் தருவதோடு, நம்பிக்கையால் நம்மை பலப்படுத்துகிறார். அவரது அன்பு துளித்துளியாக அளந்து கொடுக்கப்படாமல், அவரது இருதயத்திலிருந்து பெருக்கெடுத்து நமது இருதயங்களில் ஊற்றப்படுகிறது. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5). நமது கஷ்டங்களின்மூலம் பொறுமையையும், நற்பண்புகளையும் நாம் பெற்றுக்கொள்ள அவர் விரும்புவதோடு, நமக்கு நம்பிக்கை மிகுந்த திருப்தியான வாழ்க்கையைத் தர விரும்புகிறார். நாம் அவரைவிட்டு தூரமாயிருந்தாலும், அவர் நம்மை நேசிக்கிறார் (வச. 6-8).
நீங்கள் நம்பிக்கை தரும் அடையாளங்களைத் தேடுகிறீர்களா? அவருடனான உறவில் வளர, நம்மை அழைப்பதன்மூலம், கர்த்தர் நமக்கு நம்பிக்கையையும், அன்பையும் தருகிறார். நிறைவான வாழ்க்கை வேண்டும் என்ற நம் நம்பிக்கை, நம்மை எப்போதும் கைவிடாத அவர் அன்பில் வேரூன்றி இருக்கிறது.
ஆத்துமாவின் ஆதாரம் நம்பிக்கையே.