நான் எனது பிரசங்க பீடத்திலிருந்து அடக்க ஆராதனைக்கான ஜெபங்களைச் சொல்லிக் கொண்டே கீழே நோக்கிய போது ஒரு பித்தளை தகட்டில் யோவான் 12:21ல் உள்ள வாசகம் பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன், “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்பதே அந்த வாசகம். நாம் கண்ணீரோடும், புன்னகையோடும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெண், இதற்கு எத்தனைப் பொருத்தமானவள், நாம் இயேசுவை அவளில் கண்டோமே என நான் நினைத்துப்பார்த்தேன். அவள் தன் வாழ்வில், அநேக ஏமாற்றங்களையும், சவால்களையும் சந்தித்த போதும், கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டதேயில்லை. தேவனுடைய ஆவியானவர் அவளில் வாசம் பண்ணியதாலேயே நாம் இவளில் இயேசுவைக் காண முடிந்தது.
இயேசு எருசலேமிற்குள் பயணம் செய்த போது, நடந்தவற்றை, யோவான் நினைவிற்குக் கொண்டுவருகிறான் (யோவா. 12:12-16). சில கிரேக்கர்கள் இயேசுவின் சீடனான பிலிப்புவிடம் வந்து, “ஐயா, இயேசுவைக்காண விரும்புகிறோம்” (வச. 21). என்றனர். அவர்கள் இயேசுவின் சுகமளிக்கும் வல்லமையும், அவர் செய்த அற்புதங்களையும் குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். எனவே அவரைக் காண ஆவலாய் இருந்தனர். அவர்கள் யூதரல்லாததால் தேவாலயத்தின் உட்பிரகாரத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுடைய வேண்டுதல் இயேசுவை அடைந்த போது, அவர் நான் மகிமைப்படும் நேரம் வந்துவிட்டது என தெரிவிக்கின்றார் (வச. 23). இதன் மூலம் அவர் அநேகருடைய பாவங்களுக்காக மரிக்கப் போகிறார் எனபதைக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பணியை நிறைவேற்றுவது யூதர்களுக்காக மட்டுமல்ல,
புறஜாதியினருக்காகவும் தான். (வச. 20). அப்பொழுது அவர்கள் இயேசுவைக் காண்பார்கள்.
இயேசு மரித்தபின்பு, அவரைப் பின்பற்றுபவர்களில் வாசம் பண்ணும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார் (14:16-17). அவர் நம்மில் வாசம் பண்ணி, செயல்படுவதாலேயே அவரில் அன்புகூரவும், அவருக்குப் பணி செய்யவும் முடிகிறது. நம்மைச் சுற்றியிருப்பவரும் நம்மில் இயேசுவைக் காண்கின்றனர். என்ன ஆச்சரியம்!
இயேசுவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் நாம் இயேசுவைக் காணலாம்.