சமீபத்தில் எங்களுடைய பேரக்குழந்தைகளோடு புளோரிடா சென்றிருந்த போது நாங்கள் வலைதள கேமரா மூலம் ஒரு கழுகின் குடும்பத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். நிலத்திலிருந்து மிக அதிகமான உயரத்திலுள்ள ஒரு கூட்டில் அந்தத் தாய், தந்தை, குஞ்சுப் பறவைகளின் செயலை ஒவ்வொரு நாளும் நாங்கள் கவனித்தோம். ஒவ்வொரு நாளும் அந்தப் பெற்றோர் பறவைகள் தங்கள் குஞ்சுகளை கவனமாக பாதுகாத்துக் கொண்டேயிருந்தன. அருகிலிருந்த நதியிலிருந்து மீன்களைக் கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுத்தன.

சங்கீதம் 104ல் சங்கீதக்காரன் தேவனுடைய படைப்பின் காட்சிகளையும், தேவனுடைய கரத்தின் கிரியைகளின் மகிமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சிறிய கழுகின் குடும்பமும் தேவனுடைய வியத்தகு படைப்பின் ஒரு சிறிய பகுதியாகும்.

தேவனுடைய இராஜ கெம்பீரத்தை அவருடைய படைப்பாகிய இந்த அண்டத்தில் காண்கின்றோம் (வச. 2-4). அவருடைய படைப்பாகிய தண்ணீரையும், மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் இப்புவியில் நாம் அனுபவிக்கின்றோம் (வச. 5-9). அவருடைய படைப்பின் ஈவாகிய விலங்குகளையும், பறவைகளையும், செடிகளையும் நாம் கண்டு மகிழ்கின்றோம் (வச. 10-18). இந்த உலகில் அவர் படைத்த இரவும், பகலும், இருளும் வெளிச்சமும், வேலையும் ஓய்வும் மாறி மாறி வருவதைப் பார்த்து அதிசயிக்கின்றோம் (வச. 19-23).

எத்தனை மகிமையான உலகத்தை தேவன் தம் கரத்தினால், நம்முடைய மகிழ்ச்சிக்கென உருவாக்கித் தந்து அவர் மகிமைப்பட்டுள்ளார். “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி” (வச. 1) நாம் ஒவ்வொருவரும் பூரித்து மகிழும்படி தேவன் நமக்குத் தந்துள்ள அனைத்துக்காகவும் அவருக்கு நன்றி சொல்லுவோம்.