Archives: மே 2018

மரத்தின் உச்சியில்

எங்களது வெல்வெட் என்ற பூனைக்குட்டி சமையலறையில் உணவுப் பொருட்கள் வைக்கும் பகுதியினுள் சென்று வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளைத் தின்று விட்டிருந்ததை என் தாயார் கண்டுபிடித்து, வெறுப்படைந்து, அதை வீட்டிற்கு வெளியே துரத்திவிட்டாள். பல மணி நேரம் கழித்து, நாங்கள் எங்கள் பூனையை வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மிக மெல்லிய “மியா” குரல் காற்றில் வந்தது. நான் மேலே பார்த்து ஓர் உயரமான மரத்தின் உச்சிக் கிளையொன்றின் மேல் எங்கள் பூனை படுத்திருப்பதைக் கண்டேன்.

என்னுடைய தாயாரின் கோபத்திலிருந்து தப்பிக்க, வெல்வெட் ஒரு பாதுகாப்பற்ற இடத்தைத் தேடிக் கொண்டது. இதைப் போன்று நாமும் சில வேளைகளில் நடந்து கொள்கிறோம். நம்முடைய தவறுகளிலிருந்து ஓடி பாதுகாப்பற்ற இடத்தில் அகப்பட்டுக் கொள்கின்றோம். அப்படியிருந்தும் தேவன் நம்மை விடுவிக்க வருகின்றார்.

தீர்க்கதரிசி யோனா, நினிவேயில் பிரசங்கிக்க தேவனால் அழைப்பைப் பெற்றபோது, அதை விரும்பாமல், கீழ்ப்படியாமல் ஓடி ஒரு பெரிய மீனால் விழுங்கப்பட்டான். ‘‘அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.”

அவன், ‘‘என நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் அவர் எனக்கு உத்தரவு அருளினார்” (யோனா 2:1-2) என்றான். தேவன் யோனாவின் வேண்டுதலைக் கேட்டு கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார். அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது (வச. 10) யோனாவுக்கு மீண்டும் தேவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (3:1).

நாங்கள் வெல்வெட்டை கீழே இறக்க எடுத்த முயற்சிகளால் சோர்ந்த போது, நாங்கள் அருகிலுள்ள தீயணைப்புத்துறையினரின் உதவியை நாடினோம். மிக உயரமான ஏணியின் உதவியால் ஓர் இரக்கமுள்ள மனிதன் மேலேறி என்னுடைய பூனையை அதன் உயர்ந்த இடத்திலிருந்து எடுத்துப் பத்திரமாக என் கரங்களில் கொடுத்தார்.

நம்முடைய கீழ்ப்படியாமையால் நாம் போயிருக்கின்ற இடம் மிக உயரமாயிருந்தாலும் அல்லது மிக ஆழமானாலும் சரி. தேவன் நம்மைத் தேடி வந்து அவருடைய மீட்கும் அன்பினால் நம்மை மீட்டு கொள்வார்.

மன்னிக்கும்படி ஒரு ஜெபம்

1960 ஆம் ஆண்டு, ஆறு வயதாயிருந்த ரூபி பிரிட்ஜஸ் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்க குழந்தை, தென் அமெரிக்காவிலுள்ள வெள்ளையரின் அனைத்து ஆரம்பநிலைப் பள்ளியை கலப்பினப் பள்ளியாக ஒருங்கிணைத்த முதல் குழந்தையாகும். கோபமான பெற்றோர் கூட்டத்தின் சாபக் குரல்களையும், பயமுறுத்தலையும், அவமானங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் ரூபி பள்ளிக்குச் செல்ல உள்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கினர். பள்ளியினுள் பாதுகாப்பாக, ஒரு வகுப்பறையில் தனிமையில் அமர்ந்திருந்த ரூபிக்கு, பார்பரா ஹென்றி என்ற ஆசிரியை மட்டும் கற்றுக் கொடுக்க முன் வந்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ரூபியோடு அமர்ந்திருக்க அனுமதிக்கவில்லை.

மிகவும் பிரசித்தி பெற்ற மனநல மருத்துவர் ராபர்ட் கோலஸ் ரூபியை பல மாதங்கள் சந்தித்து, அவள் தன் பயத்தையும் மன அழுத்தத்தையும் மேற்கொள்ள உதவினார். ரூபி ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் போதும், திரும்பும் போதும் ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டு, அவர் வியப்படைந்தார். ‘‘தேவனே, தயவு கூர்ந்து இவர்களை மன்னியும். ஏனெனில் அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்” என ஜெபித்தாள் (லூக். 23:34).

இயேசு சிலுவையில் மொழிந்த வார்த்தைகள், அவர் மீது எறியப்பட்ட வெறுப்பையும், அவமானங்களையும் விடப் பெரியது. அவருடைய வாழ்வில் மிகவும் வேதனையடைந்த நேரத்தில் நம்முடைய தேவன், தான் சீடர்களுக்குப் போதித்த காரியங்களைச் செயலில் காட்டினார்.  ‘‘உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், ... உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்” என இயேசு தன் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார் (லூக். 6:27-28, 36).

இயேசு நமக்குக் கொடுத்த அன்பை நாம் பிறரிடம் காட்டும் போது மட்டுமே இந்த குறிப்பிடத்தக்க அணுகுமுறையைச் செயல்படுத்த முடியும். ஆழமான வெறுப்பினைவிட இயேசுவின் அன்பு வலிமையானது.

ரூபி பிரிட்ஜஸ் நமக்கு வழி காட்டினாள்.

ஒரு புதிய சமுதாயம்

என்னுடைய சிநேகிதி கேரியின் ஐந்து வயது மகள் மைஜா. ஒரு புதிய முறையில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு வெவ்வேறு விதமான பொம்மைகளை ஒன்றாக வைத்து, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விளையாடுவது மிகவும் விருப்பமான ஒன்று. அவளுடைய கற்பனை உலகத்தில் எல்லாம் ஒன்றுக்கொன்று சொந்தமானவை. அவர்களே அவளுடைய ஜனங்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறு வடிவம், நிறம் உருவத்திலிருந்தாலும் ஒன்றாயிருக்கும்போது தான் மகிழ்ச்சியாயிருப்பர் என நம்பினாள்.

அவளுடைய படைப்பாற்றல், தேவன் சபையில் விரும்பும் ஒன்றினை நினைவுபடுத்துகின்றது. பெந்தெகொஸ்தே என்ற நாளில் ‘‘வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம் பண்ணினார்கள்” (அப். 2:5) என லூக்கா சொல்கின்றார். இந்த ஜனங்கள் வெவ்வேறு கலாச்சாரம், பாஷைக்காரராயிருந்த போதிலும், பரிசுத்த ஆவியானவர் வந்து அவர்களை ஒரு புதிய சமுதாயமாக்கினார். அன்றிலிருந்து சபை அவர்களை ஒரே சரீரமாக, இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இணைக்கின்றது.

இயேசு இவ்வுலகில் இருந்தபோது ஒன்றாக இணைந்த ஒரு கூட்ட மனிதர்களே, அவருடைய சீடர்களே, இந்தச் சமுதாயத்தின் தலைவர்கள். இயேசு அவர்களை இணைக்காதிருந்தால், அவர்கள் ஒன்றாக இணைந்திருக்கவே முடியாது. இப்பொழுது இன்னும் அதிகமானோர், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் (2:41) கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இணைந்தனர். ஒரு காலத்தில் பிரிந்திருந்த இந்த குழுவினர் இப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் இணைக்கப்பட்டனர். அவர்கள் ‘‘சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்” (வச. 44). அவர்கள் தங்களுக்குரிய யாவற்றையும் பிறரோடு
பகிர்ந்துகொள்ளத் தயாராயிருந்தனர்.

பரிசுத்த ஆவியானவர் மக்கள் பிரிவுகளுக்கிடையே பாலமாக அமைந்து அவர்களை இணைக்கின்றார். நாம் எப்பொழுதும் மற்றவர்களோட இணைந்து எளிதாக அவர்களைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் கிறிஸ்துவின் விசுவாசிகளாக நாம் இணைந்து கொள்கின்றோம்.

நடக்காவிட்டாலும்

வாழ்க்கையில் சில வேளைகளில் அடிவிழுகிறது. சில வேளைகளில் அற்புதங்கள் நிகழுகின்றன. பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வாலிபர்கள், அத்தேசத்தின் பயப்படத்தக்க ராஜாவின் முன் நின்று தைரியமாக எந்த சூழ்நிலையிலும் அவர் நிறுத்திய பொற்சிலையை வணங்குவதில்லை என்று அறிவிக்கிறார்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து, ‘‘தேவன், எரிகிற அக்கினிச் சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை. நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்வதுமில்லை” எனக் கூறினர் (தானி. 3:17-18).

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களையும் கட்டி எரிகிற அக்கினிச் சூளையிலே போட்டனர். ஆனால், தேவன் அற்புதமாக அவர்களை விடுவித்தார். அவர்களின் தலைமயிர் கருகாமலும் அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும் இருந்தன. (வச. 19-27). அவர்கள் சாகவும் தயாராயிருந்தனர். அவர்கள் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையில் தளரவில்லை. தேவன் எங்களை விடுவிக்காவிட்டாலும்... என்று உறுதியாயிருந்தனர்.

நாம் தேவனைப் பற்றிக்கொள்ள, அவர் விரும்புகிறார். ஒருவேளை நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை தேவன் குணப்படுத்தாவிடினும், நம் வேலையை இழந்தாலும், நாம் துன்புறுத்தப்பட்டாலும் தேவனைப் பற்றிக் கொள்வோம். சில வேளைகளில் தேவன் இவ்வாழ்வின் துன்பங்களிலிருந்து நம்மை விடுவித்து விடலாம் அல்லது விடுவிக்காமற்போகலாம். ஆனால், ‘‘நாம் ஆராதிக்கும் தேவன் எல்லாம் செய்ய வல்லவர்” என்பதை உறுதியாகப் பற்றிக் கொள்வோம். விடுவிக்காவிட்டாலும் நம்முடைய ஒவ்வொரு சோதனையின் மத்தியிலும் தேவன் நம்மோடிருக்கிறார். நம்மை நேசிக்கிறார்.