உரத்த சத்தமான, வேதனை நிறைந்த குரல் அந்த மதிய வேளையின் இருளைக் கிழித்துக் கொண்டு வந்தது. அது இயேசுவின் பாதத்தினருகில் இருந்த அவருக்கன்பானவர்கள், நண்பர்களின் புலம்பலின் சத்தத்தையும் மேற்கொண்டது. அது, இயேசுவின் அருகில் சிலுவையின் இருபுறமும் இருந்த இரு குற்றவாளிகளின் குமுறலையும் மேற்கொண்டது. அக்குரலைக் கேட்ட யாவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி?” இயேசு வேதனையில் நம்பிக்கையிழந்தவராய், கொல்கொதா மலை மேல், அவமானத்தின் சின்னமான சிலுவையில் தொங்கியபடி இவ்வாறு கூப்பிடுகின்றார் (மத். 27:45-46).
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கேட்கின்றார். இதனையும் விட வேதனை தரும் வார்த்தைகள் என்ன இருக்கின்றது? நித்திய இராஜ்ஜியத்தில் இயேசுவானவர் தேவனாகிய பிதாவோடு நல்ல ஐக்கியத்தில் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்தே இந்த உலகத்தைப் படைத்தனர். இருவரும் சேர்ந்தே மனிதனை தங்களின் சாயலாகப் படைத்தனர். அவர்கள் இருவரும் இரட்சிப்பைக் குறித்து திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் கடந்த நீண்ட காலங்களில் முற்றிலும் ஐக்கியமாகவேயிருந்தனர்.
இப்பொழுது இயேசு சிலுவையில் வேதனைகளையும் வலியையும் தொடர்ந்து சகித்தார். உலகத்தின் பாவங்களனைத்தும் தன் மீது சுமத்தப்பட்டதால், முதல் முறையாக தேவ பிரசன்னத்தை இழக்கின்றார்.
இதுவே ஒரே வழி. இந்த ஐக்கியத்தில் ஏற்பட்ட இடைவெளி மூலமாகவே நமக்கு இரட்சிப்பு அருளப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்ட அனுபவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலேயே மனிதர்களுக்கு தேவனோடுள்ள ஐக்கியம் கிடைத்தது.
இயேசுவே, நாங்கள் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக, மிகவும் அதிக வேதனைகளைச் சிலுவையில் சகித்ததற்காக உமக்கு நன்றி சொல்கின்றோம்.
இழந்து போனவர்களின் மீது தேவனின் அன்புள்ள இருதயத்தைச் சிலுவை வெளிப்படுத்துகின்றது.