எமி கார்மைக்கேல் அம்மையார் (1867-1951) இந்தியாவில் அனாதைப் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்கு புதிய வாழ்வையளித்தது யாவருக்கும் தெரிந்திருக்கும். இந்த கடின வேலையின் மத்தியில் ‘‘தரிசன நேரம்” என்று அவர் அழைக்கும் காரியத்திற்கும் நேரம் ஒதுக்கியிருந்தார். அவர் எழுதிய ‘‘கோல்ட் பை மூன்லைட்” என்ற புத்தகத்தில் ‘‘ஒரு நெரிசல் மிக்க நாளில் அந்த தொலை தூர தேசத்தை ஒரு துளியளவு தான் பார்க்க முடிந்தது. நாங்கள் இன்னமும் சாலையிலேயே அடைபட்டு நின்று கொண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த அவருடைய ஜனங்கள் மீண்டும் தேவனிடம் திரும்புவதைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி சொல்கின்றார், ‘‘உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்” (ஏசா. 33:17). தற்கால சூழ்நிலையிலிருந்து நம் கண்களை உயர்த்தி இந்த தூர தேசத்தைக் கண்டு, நித்திய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வோம். கடினமான வேளைகளில் நம்முடைய வாழ்வை அவருடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்படியாக நம்மை பெலப்படுத்தி நமக்கு நம்பிக்கையைத் தருகின்றார். ‘‘கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்” (வச. 22)

ஒவ்வொரு நாளையும் நாம் ஊக்கமிழந்தவர்களாகப் பார்க்கப் போகின்றோமா? அல்லது நம்முடைய கண்களை உயர்த்தி இந்த ‘‘தூர தேசத்தையும்” நம்முடைய மகிமை பொருந்திய கர்த்தரையும்” (வச. 21) நோக்கிப் பார்க்கப் போகின்றோமா?

எமி கார்மைக்கேல் அம்மையார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் செலவிட்டு, மிகவும் தேவையுள்ள இளம்பெண்களுக்கு உதவினார். இதனை எப்படி செய்ய முடிந்தது? ஒவ்வொரு நாளும் தன் கண்களை இயேசுவின் மீது வைத்து, தன்னுடைய வாழ்வை இயேசுவின் பாதுகாப்பில் வைத்தார். நாமும் அவ்வாறு செய்ய முடியும்.