‘‘தேவனுக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவர் எப்பொழுதும் இருக்கிறாரெனின் நம்மைப் படைப்பதற்கு முன் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவருடைய நேரத்தை எவ்வாறு செலவிட்டார்?” தேவனுடைய நித்திய வாழ்வைப் பற்றி விளக்கும் போது, ஒரு முன் யோசனையுள்ள ஞாயிறு பள்ளி மாணவன் இக்கேள்விகளைக் கேட்டான். நான் அவனிடம், இது சற்று விளங்கிக்
கொள்ளமுடியாத கருத்து என பதிலளித்தேன். ஆனால், சமீபத்தில் இக்கேள்விக்கான விடையை வேதாகமத்திலிருந்து கற்றுக் கொண்டேன்.
யோவான் 17ல் இயேசு பிதாவிடம் ஜெபிக்கும்போது ‘‘பிதாவே, உலகதோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தீர்” (வச. 24) எனக் குறிப்பிடுகிறார். இதில் இயேசு நமக்குப் பிதாவை வெளிப்படுத்துகின்றார். அவர் இவ்வுலகை படைத்து, அதை அரசாட்சி செய்யுமுன்னரே தேவன் தன் குமாரனை ஆவியில் நேசித்த ஒரு தந்தையாயிருந்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது தேவன் தம்முடைய ஆவியை ஒரு புறாவைப் போல அனுப்புகின்றார். மேலும் ‘‘இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத். 3:17) என்றும் சொல்கின்றார். தேவனின் அடிப்படைப் பண்பு இந்த வாழ்வு தரும் அன்பில் வெளிப்படுகின்றது.
தேவனைப் பற்றிய இந்த உண்மை நமக்கு எத்தனை அன்பையும், ஊக்கத்தையும் தருவதாகவுள்ளது. திருத்துவத்திலுள்ள பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இம்மூவரும் ஒருவரிலொருவர் செலுத்தும் அன்பு தான் நாம் தேவனின் தன்மையைப் புரிந்து கொள்ளக்கூடிய முக்கிய கருத்தாகும். காலத்தின் துவக்கத்திற்கு முன்பாக பிதாவாகிய தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? தன்னுடைய குமாரனை பரிசுத்த ஆவியின் மூலம் அன்பு செய்தார். தேவன் அன்பாகவேயிருக்கிறார்” (1 யோவா. 4:8). இந்தக் காட்சி நாம் இதனைப் புரிந்து கொள்ள உதவியாயிருக்கிறது.
அன்பினால் நம்மைச் சொந்தமாக ஏற்றுக்கொண்ட தேவனுடைய சாயலாக நாம் உருவாக்கப்பட்டுள்ளோம்.