காலையில் அதிக இருட்டோடு இருக்கும்போதே ஆ-பி தன் நாளைத் துவக்கிடுவாள். கிராமத்தில் உள்ள மற்றவர்களும் சீக்கிரத்தில் எழுந்து ரப்பர் தோட்டத்திற்கு போக புறப்படுவார்கள். சீனாவின் (ஹூவாங்சாங்) கிராமத்தில் ஒரு ரப்பர் மரப்பால் (latex) தான் அவர்களுக்கு பிரதான வருமான ஆதாரம். விடியும்முன் எவ்வளவு சீக்கிரமாய் அவர்கள் மரத்தை செதுக்குகிறார்களோ அவ்வளவாய் அவர்கள் பாலை எடுக்கமுடியும். காலையில் ரப்பர் மரத்தை செதுக்குகிறவர்கள் நடுவில் ஆ-பி காணப்பட்டாலும், அவள் முதலில்

ஆண்டவரோடுதான் தன் நேரத்தை செலவிடுவாள்.

ஆ-பியின் தகப்பன், கணவர் மற்றும் ஒரே மகன் மூவரும் இறந்துபோனார்கள். ஆனால் அவள் – தன் மருமகளுடன் இணைந்து வயது முதிர்ந்த தாயார் மற்றும் இரண்டு பேரன்களை பராமரித்து வந்தாள். இவளுடைய கதை, வேதத்திலே ஆண்டவரை நம்பிய இன்னொரு விதவையை எனக்கு நினைவுபடுத்துகிறது.

விதவையின் இறந்த கணவன் அவளைக் கடனில் விட்டு சென்றுவிட்டான் (2 இரா. 4:1). தன்னுடைய இக்கட்டிலே அவள் ஆண்டவரின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய ஊழியக்காரனாகிய எலிசாவை அணுகினாள். ஆண்டவர் அவள்மேல் அக்கறையாய் உள்ளார் என்றும், அவளுடைய இந்த நிலைமையில் அவர் எதையாவது செய்வார் என்றும் நம்பினாள். தேவனும் அவ்வாறே செய்தார். விதவையின் அவசரத் தேவையை அற்புதமாக சந்தித்தார் (வச. 5-6). இதே ஆண்டவர் ஆ-பிக்கும் பெரிய அற்புதத்தை நிகழ்த்தாமல் அவளுடைய கையின் பிரயாசம், நிலத்தின் விளைபொருள், அவருடைய மக்கள் தரும் வெகுமதிகளின் மூலமாக நன்மை செய்தார்.

வாழ்க்கை நம்மேல் அநேக அழுத்தங்களைச் சுமத்தினாலும், தேவனுடைய பலம் நமக்கு எப்போதும் உண்டு. நம்முடைய கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்து, நம்மால் இயன்றதை நாம் செய்யும்போது, நம்முடைய சூழ்நிலைகளில் தம்முடைய கரத்தின் கிரியைகளின் மூலமாக அவர் செய்யும் காரியம் ஆச்சரியமாயிருக்கும்.