நாம் ஒரு நபரைச் சந்திக்கும்போது, “நீங்க யாரு, எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றெல்லாம் கேட்பது வழக்கம். ஆனாலும், நம்மில் அநேகருக்கு, அந்தக் கேள்விக்கான விடையளிப்பது வில்லங்கமாய் இருக்கும். சிலசமயம், முழுவிவரங்களை சொல்ல விரும்பவும் மாட்டோம்.
நியாயாதிபதிகள் புத்தகத்தில், யெப்தா அந்தக் கேள்விக்கான பதிலை தர விரும்பியிருக்கமாட்டான். அவனுடைய பிறப்பில் குற்றம் கண்டுபிடித்த அவன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அவனை அவனுடைய சொந்த ஊரான கீலேயாத்திலிருந்து துரத்திவிட்டார்கள். “நீ அந்நிய ஸ்திரியின் மகன்” (நியாயாதிபதிகள் 11:2) என்று அவனை பழித்தார்கள். அந்த வேதபகுதி அப்பட்டமாக, “அவனுடைய தாய் ஒரு பரஸ்திரி (வேசி) என்றே குறிப்பிடுகிறது” (வச. 1).
ஆனால் யெப்தா சுபாவத்தின்படியே ஒரு தலைவனாக இருந்தான். கீலேயாத்துக்கு விரோதமாக பகைஞர் எழும்பினபோது அவனை துரத்திவிட்டவர்கள் அவனைத் தேடிப்போய், “நீ எங்கள் சேனாதிபதியாக இருக்கவேண்டும்” (வச. 6) என்று கேட்டார்கள். அதற்கு யெப்தா, “நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்?” (வச. 7) என்று கேட்டதற்கு காரியங்கள் சுமூகமாய் மாறும் என்ற ஒரு உத்தரவாதம் பெற்றபின் அவர்களைத் தலைமைதாங்க ஒப்புக்கொண்டான். வேதம் நமக்கு சொல்லுகிறது “அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்…” (வச. 29). விசுவாசத்துடன் முன்னேறிய யெப்தா பெரிய வெற்றிக்கு நேராக அவர்களை நடத்தினான். புதிய ஏற்பாட்டு விசுவாச வீரர்களின் பட்டியலில் அவனுடைய பெயரும் இடம்பெறுவதைப் பார்க்கிறோம் (எபி. 11:32).
அநேக வேளைகளில் தேவன் பொருத்தமில்லாத மக்களையே தம் பணிக்காகத் தெரிந்தெடுக்கிறார். நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி வந்தோம் அல்லது என்ன செய்தோம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகாது. அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்து எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம்.
முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்…
மத்தேயு 19:30