புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த என் சிநேகிதி ஒருமுறை நள்ளிரவில் என்னை தொடர்புகொண்டாள். தேம்பிதேம்பி அழுத அவளுடைய கண்ணீருடன் என் கண்ணீரையும் சேர்த்து அமைதியாக அவளுக்காக வேண்டினேன்.: நான் என்ன செய்யட்டும் ஆண்டவரே?

அவளுடைய குமுறல்கள் என் உள்ளத்தை கசக்கி பிழிந்தன. அவளுடைய வேதனையை போக்கவோ, சூழ்நிலையை மாற்றவோ, அவளை தைரியப்படுத்தவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் யார் அவளுக்கு உதவமுடியும் என்பதை நான் அறிந்திருந்தேன். என்னுடைய சிநேகிதியுடன் இணைந்து நானும் கண்ணீர்விட்டு என் ஜெபத்தில் திரும்ப திரும்ப “இயேசு, இயேசு” என்றே முனகிக்கொண்டிருந்தேன்.

அவளுடைய அழுகுரல் மெல்லக் குறைந்து விசும்புலாக மாறி பின்பு அமைதி நிலவியது. “அவள் உறங்கிவிட்டாள்” என்று சொன்ன அவளுடைய கணவன். “நாளை மறுபடியும் அழைக்கிறோம்” என்றார்.

தொலைபேசியை வைத்துவிட்டு, என் தலையணையை கண்ணீர் ஜெபத்தால் நனைத்தேன்.

சுவிசேஷகனாகிய மாற்கு, தனக்கன்பான ஒருவருக்கு உதவிசெய்ய விரும்பினவரைப் பற்றி எழுதுகிறார். கலங்கிய தகப்பன் கஷ்டப்படும் தன் மகனை இயேசுவண்டை அழைத்துவந்தார் (மாற். 9:17). சூழ்நிலைகளின் அகோரத்தை (வச. 20-22) விவரிக்கும்போதே, தன்னுடைய அவநம்பிக்கையை அறிக்கைசெய்து, இயேசு தன் அவிசுவாசத்தை போக்கவேண்டும் என்று கேட்டார் (வச. 24). இயேசு காரியங்களைத் தன் கையில் எடுத்த அந்த வேளையில்தானே தகப்பன், மகன் இருவரும் ஒரு விடுதலை, நம்பிக்கை மற்றும் சமாதானத்தை அனுபவித்தனர் (வச. 25-27).

நமக்கு அன்பானவர்கள் பாடுபடும்போது, அவர்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும், சரியான வார்த்தைகளைக் கூறவேண்டும் என்று விரும்புவது இயல்புதான் ஆனாலும், உண்மையாய் நமக்கு உதவிசெய்யக்கூடிய ஒருவர் உண்டானால், அது இயேசு கிறிஸ்து மாத்திரமே. இயேசுவை நோக்கி அபயமிடும்போது, அவரை விசுவாசிக்கவும் அவருடைய வல்லமையின் பிரசன்னத்தில் நம்பிக்கையாய் இருக்கவும் நமக்கு அவர் உதவுகிறார்.