நம்முடைய அபிப்பிராயங்களுடன் ஒத்துப்போகும் ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மனித இயல்பு. நம் கருத்துக்களை ஆதரிக்கும் தகவல்களை நாம் இரண்டு மடங்கு கூடுதலாக தேட முற்படுகிறோம் என்று ஒரு ஆராய்ச்சி அறிவிக்கிறது. நம்முடைய கொள்கைகளின்மேல் ஓர் அசைக்கமுடியாத பற்று கொண்டிருந்தால், எதிர்மறை சிந்தனைகள் நமக்கு விடுக்கும் சவால்களை நாம் அறவே தவிர்ப்போம்.
ஆகாப் ராஜா இஸ்ரவேலை ஆண்டபோதும் இப்படியே நடந்தது. அவனும் யூதாவின் ராஜா யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தம் புரியலாமா கூடாதா? என்று ஆலோசித்தபோது, ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை – தன்னால் நியமிக்கப்பட்டு தான் விரும்புகின்ற காரியத்தை உரைக்கும் மனிதர்களை-வரவழைத்து யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு ஒவ்வொருவரும், “தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார்” என்றார்கள் (2 நாளா. 18:5). யோசபாத்து, “நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா” என்று கேட்டான். அதற்கு ஆகாப் தயக்கத்துடன், தேவனுடைய தீர்க்கத்தரிசி மிகாயா என்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால், அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான் (வச. 7). அப்படியே, அவர்கள் யுத்தத்தில் தோற்றுப்போவார்கள் என்றும், மக்கள் எல்லாம் “மலைகளில் சிதறிப்போவார்கள்” என்றும் அவன் உரைத்தான் (வச. 16).
இந்தக் கதையை வாசிக்கும்போது நானும் எப்படி எனக்கு ஒத்துவராத நல் ஆலோசனைகளை தவிர்க்கிறேன் என்பதை புரிந்துகொண்டேன். ஆகாபின் விஷயத்தில், தனக்கு “இசைவாக பேசுகின்ற 400 தீர்க்கத்தரிசிகளுக்கு செவிகொடுத்தது அழிவில் முடிந்தது (வச. 34). நாமும் சத்தியத்தின் சத்தத்திற்கு, வேதத்தில் காணப்படும் தேவனுடைய வார்த்தைகளுக்கு, அவைகள் நம்முடைய சொந்த விருப்பங்களுக்கு மாறாக இருந்திட்டாலும், கீழ்ப்படிய ஒப்புக்கொடுப்போம்.
தேவனுடைய ஆலோசனைகள் நம்பத்தக்கதும் நன்மையுள்ளதுமாய் உள்ளது.