ஒரு நாள், பிந்திய இரவில் நான் பொருளாதார யோசனைகளைத் தரும் புத்தகங்களை மேலோட்டமாகத் திருப்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு வித்தியாசமான போக்கினை கண்டேன். எல்லா புத்தகங்களும் நல்ல யோசனைகளைத் தந்த போதிலும், அநேகருடைய கருத்து என்னவெனில், இப்பொழுது செலவைக் குறைப்பதின் அடிப்படை நோக்கம், பிற்காலத்தில் கோடீஸ்வரனாக வாழ்வதற்காகவேயாம். ஆனால் ஒரு புத்தகம் வித்தியாசமான மற்றொரு கருத்தைத் தந்தது. எளிய வாழ்வு என்பது ஒரு செல்வ வாழ்வுக்கு வழிவகுக்கும். ஆனால் உனக்கு அதிக புதிய பொருட்களால் தான் மகிழ்ச்சியைத் தர முடியும் என்று கருதுவாயாயின் ‘‘நீ உயிரோடிருக்கிறாய் என்பதை உணரத் தவறுகிறாய்” என அந்த புத்தகம் தெரிவித்தது.
இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் என் மனதிற்குள் சில நினைவுகளைக் கொண்டு வந்தன. ஒரு மனிதன் இயேசுவிடம் வந்து, தனக்குள்ள ஆஸ்தியை பாகம் பிரித்துத் தரும்படி தன் சகோதரனுக்குக் கட்டளையிடும் என்று வற்புறுத்துகிறான். அவன் மீது அனுதாபம் கொள்ளாமல், இயேசு அவனைக் கடிந்து அனுப்புகிறார். மேலும், ‘‘பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும், அது அவனுக்கு ஜீவன் அல்ல” (லூக். 12:14-15) என அறிவுறுத்துகிறார். பின்பு அவர் ஐசுவரியமுள்ள ஒருவன் தன்னுடைய தானியங்களைச் சேர்த்து வைக்க நினைத்த திட்டத்தைக் குறித்து விளக்குகின்றார். இது முதலாம் நூற்றாண்டில் கைக்கொள்ளப்பட்ட ஓய்வு ஊதிய திட்டம். ஒரு தெளிவான முடிவு எடுக்கின்றான். அன்றிரவே அவன் மரித்துப் போனான் அவன் சேர்த்து வைத்தவை அவனுக்கு உதவாமல் போனது (வ. 16-20) என எச்சரிக்கின்றார்.
நாமும் நமக்குள்ள பொருளாதாரத்தை ஞானமாய் பயன்படுத்த கடமைப்பட்டிருந்தாலும், இயேசுவின் வார்த்தைகள் நம்முடைய எண்ணங்களை ஆராய்ந்து பார்க்கச் சொல்லுகிறது. நம்முடைய இருதயம் எப்பொழுதும் தேவனுடைய ராஜ்ஜியத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக் கொண்டிராமல், அவரை அறிந்து கொண்டு, பிறருக்கு சேவை செய்து வாழலாம். (வச. 29-31). மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, அவருக்காக நாம் வாழும் போது, தேவனோடு பூரண மகிழ்ச்சியான, செழிப்பான ஒரு வாழ்வை, அவருடைய ராஜ்ஜியத்தை இப்பொழுதே அனுபவிப்பதோடு, நம் வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வோம் (வச. 32-34).
தேவனுடைய ராஜ்ஜியத்தில் செழிப்பான ஒரு வாழ்வை அனுபவிக்க நாம் காத்திருக்கத் தேவையில்லை.