ஓர் அழுக்கடைந்த சாலையில் ஒருவரையொருவர் இடிக்குமளவுக்கு நெருக்கமான ஜனக்கூட்டத்தினரிடையே நீ நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாய் எனக் கற்பனை செய். இக்கூட்டத்தின் பின்பக்கம் நிற்கும் பெண்கள் நுனிக் காலில் நின்று யார் வருகிறார்களென எட்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் ஒரு மனிதன் கழுதையின் மேல் வருவது லேசாகத் தெரிகிறது. அவர் நெருங்கி வருகையில் ஜனங்கள் தங்கள் மேலாடைகளைச் சாலையில் விரிக்கின்றனர். திடீரென, உன் பின்பக்கம் ஒரு மரக்கிளை ஒடியும் சத்தம் கேட்கிறது. ஒரு மனிதன் தென்னை மர ஓலைகளை வெட்டிக் கொண்டிருக்கின்றான். ஜனங்கள் அவற்றை சாலையில் கழுதைக்கு முன்பாகப் பரப்புகின்றனர்.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது அவருடைய சீடர்கள் மிக உற்சாகமாக அவரை வரவேற்றனர். அந்த ஜனக்கூட்டம் மிக மகிழ்ச்சியோடு தேவனை மகிமைப்படுத்தினார்கள். தாங்கள் கண்ட சகல அற்புதங்களையும் குறித்து சந்தோஷப்பட்டார்கள்” (லூக். 19:37) இயேசுவின் பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ‘‘கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வ. 38) என சத்தமிட்டனர். அவர்களுடைய உற்சாக வரவேற்பு எருசலேம் நகரத்தாரைப் பாதித்தது. கடைசியாக அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, ‘‘இவர் யார்?” என்று விசாரித்தனர். (மத். 21:10).

இன்றைக்கும் அநேக ஜனங்களிடையே யார் இந்த இயேசு என்ற கேள்வியுள்ளது. நாம் இயேசு வரும் பாதையில் மரக்கிளைகளையும், இலைகளையும் பரப்ப முடியாவிட்டாலும், இயேசுவைப் புகழ்ந்து சத்தமிட முடியாததாயினும், நாமும் அவரை கனப்படுத்த முடியும். நாம் அவர் செய்த மகத்துவமான செயல்களை விவரித்துச் சொல்ல முடியும். தேவையுள்ள ஜனங்களுக்கு உதவ முடியும்; நம்மைக் காயப்படுத்துவோரை பொறுத்துக் கொள்ள முடியும். ஒருவரையொருவர் ஆழ்ந்து நேசிக்க முடியும். அப்படிச் செய்வோமேயாயின், நாம் அந்த வேடிக்கைப் பார்க்கும் அந்தக் கூட்டத்திடம் இயேசு யாரென்று பதில் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.