இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் புதிதாக சேர்ந்தோர், தங்கள் வீடுகளை விட்டு வெகு தொலைவில் பயிற்சி பெற்ற போது, தாங்கள் எதிர் நோக்கிய சவால்களை எப்படி வெற்றியாகச் சமாளித்தனர் என்பதை நகைச்சுவையோடு கடிதமாக எழுதச் செய்தனர். ஓர் இளைஞன் தன் வீட்டிற்கு எழுதிய கடிதத்தில் அங்கு தடுப்பு ஊசி போட்ட செயலை அற்புதமாக மிகைப்படுத்தி விளக்கியிருந்தான். இரண்டு மருத்துவ அதிகாரிகள் எங்களை ஈட்டி இணைக்கப்பட்ட கயிறுகளோடு வந்து, எங்களை விரட்டிப் பிடித்து, இழுத்துச் சென்றனர். எங்களை தரையோடு சேர்த்து அசையமுடியாதபடி செய்தனர், இரு புயங்களிலும் ஈட்டியைக் குத்தினர் என்றெழுதியிருந்தான்.
மற்றொரு இராணுவ வீரர் அந்த நகைச்சுவை தன்னை இவ்வளவு தூரம் தான் கொண்டுவர இயலும் என்று கண்டுகொண்டார். அப்பொழுது அவருக்கு ஒரு வேதாகமம் கொடுக்கப்பட்டது. “நான் அதனை மிகவும் நேசித்து ஒவ்வோர் இரவும் வாசித்தேன்” என்று எழுதுகின்றார். ‘‘நான் ஒரு வேதாகமத்திலிருந்து இவ்வளவு கற்றுக் கொள்ள முடியும் என்பதை அதுவரை உணராதிருந்தேன்” என்று எழுதியிருந்தார்.
வெகு நாட்களுக்கு முன்பு யூதர்கள், அநேக வருடங்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்த பின் தங்கள் நாட்டிற்குத் திரும்புகின்றனர். அப்பொழுது அவர்களோடு பிரச்சனைகளும் வந்தன. அவர்கள் எருசலேமின் சுற்றுச் சுவரை கட்டியெழுப்பப் போராடிய போது, எதிரிகளிடமிருந்து எதிர்ப்பையும், பஞ்சத்தையும், அவர்களுடைய பாவத்தின் விளைவையும் எதிர் கொண்டனர். அவர்களுடைய துன்பங்களின் மத்தியில் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு நேராகத் திரும்பினர். அவர்கள் கற்றுக் கொண்டதைக் குறித்து ஆச்சரியப்பட்டனர். ஆசாரியர்கள் தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்தபோது, ஜனங்கள் கண்ணீர் விட ஆரம்பித்தனர் (நெ. 8:9). அத்தோடு அவர்கள் ஆறுதலையும் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது அதிபதியான நெகேமியா, ஜனங்களிடம் விசாரப்பட வேண்டாம்; “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (வச. 10) என்றார்.
நாம் தேவனிடமிருந்து வார்த்தைகளைப் பெறும்படி காத்திருந்து, கஷ்டப்பட தேவையில்லை. வேதாகமத்தில் அவருடைய குணாதிசயங்களையும், அவருடைய மன்னிப்பையும் அவருடைய ஆறுதலையும் குறித்துப் படிக்கின்றோம். நாம் வேதத்தை வாசிக்கும் போது தேவனுடைய ஆவியானவர் அந்தப் பக்கங்களில் நம்மோடு பேசுவதைப் பார்த்து வியந்து போவோம்.
நாம் எப்படியிருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ளவும். தேவன் நம் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார் என்பதையும் வேதாகமம் நமக்குக் காட்டுகிறது.