‘‘ஜெபமாகிய வரம் எத்தகையது என்று உணராதிருந்தேன். என்னுடைய சகோதரன் சுகவீனமான போது நீங்களெல்லாரும் அவனுக்காக ஜெபித்தீர்கள். உங்களுடைய ஜெபங்கள் சொல்ல முடியாத அளவு ஆறுதலைத் தந்தது”.

புற்றுநோயால் அவதியுறும் தன்னுடைய சகோதரனுக்காக, எங்கள் ஆலயத்தின் நபர்கள் ஜெபித்ததற்காக லாரா நன்றி கூறியபோது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மேலும், ‘‘உங்களுடைய ஜெபம் இந்த கடினமான சூழல்களில் அவனை
பெலப்படுத்தினதோடல்லாமல், எங்கள் குடும்பத்தினரனைவரையும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது” என்றும் கூறினாள்.

பிறரை நேசிக்க சிறந்த வழி அவர்களுக்காக ஜெபிப்பதே. இதற்கு முழு எடுத்துக்காட்டாக இயேசு செயல்பட்டார். புதிய ஏற்பாட்டில் இயேசு பிறருக்காக ஜெபிப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். மேலும், அவர் நமக்காகப் பிதாவிடம் தொடர்ந்து வருவதையும் பார்க்கின்றோம். ரோமர் 8:34ல் ‘‘அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர். நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” என சொல்லப்பட்டுள்ளது. சிலுவையில் தன்னலமற்ற ஓர் அன்பை நமக்காக வெளிப்படுத்தின பின்பு உயிரோடெழுந்து, பரலோகத்திற்கு ஏறின இயேசு கிறிஸ்து இன்னமும், இந்த நேரத்திலும் தொடர்ந்து நமக்காக ஜெபம் பண்ணிக் கொண்டு நம்மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இயேசுவைப் பின்பற்றி நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களை நேசித்து, தேவன் அவர்களுக்கு உதவும்படியாகவும், அவர்கள் வாழ்வில் செயல்படும்படியாகவும் அவர்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர் அப்படியே செய்வார். நம்முடைய அன்பின் தேவன் நம்மை பெலப்படுத்தி, நாம் தாராளமாக நம்முடைய வரமாகிய ஜெபத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி செய்வாராக.