கைபேசியின் ஒரு முக்கிய நன்மையென்னவெனின், நாம் பிறரோடு தடையில்லாமல் எங்கேயிருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும். அதன் விளைவாக அநேகர் வாகனங்களை ஓட்டும்போதும் பேசுகின்றனர், குறுஞ் செய்திகளை அனுப்புகின்றனர். அதன் விளைவாக பயங்கர, வாகன விபத்துக்களைச் சந்திக்கின்றனர். இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்க, உலகின் பல பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது உள்ளாகும் கவனச் சிதறலை சட்ட விரோதமானதாக அறிவித்திருக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு உதவியாக கைப்பேசி மண்டலத்தைத் தெரிவிக்கும் குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் சாலையை விட்டு விலகி வந்து பாதுகாப்பாக கைபேசியில் பேசவும், மனம் விரும்பிய செய்திகளை அனுப்பவும் முடியும்.
இது வாகனம் ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு நல்ல திட்டமாகும். இன்னொரு வகையான தொடர்பு சாதனமுண்டு. அதற்கு கட்டுப்பாடு இல்லை. அதுதான் ஜெபம். தேவன் நம்மை எங்கிருந்தாலும், போகும் போதும், வரும் போதும் அல்லது உட்கார்ந்திருந்தாலும் அவரைக் கூப்பிடச் சொல்லுகிறார். புதிய ஏற்பாட்டில் பவுல் தேவனோடு தொடர்பு கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்லுவது, ‘‘இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” (1 தெச. 5:17). மேலும் பவுல் ‘‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்;” (வ.16), எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்” (வச. 18) என்று ஊக்கப்படுத்துகின்றார். தேவன் நம்முடைய மகிழ்ச்சியையும், நன்றியறிதலையும் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகவும், மேலும் கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் தொடர்ந்து ஜெபத்தில் பாதுகாப்பாகவும் இருக்க அழைக்கின்றார்.
நம்முடைய அவசர குரலுக்கும் அல்லது ஒரு நீண்ட உரையாடலுக்கும் தேவன் எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றார். நாம் அவரோடு நம்முடைய மகிழ்ச்சி, நன்றியறிதல், தேவைகள், கேள்விகள் மற்றும் நம்முடைய ஆவல்களையும் தொடர்ந்து, முடிவில்லாமல் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கின்றார் (எபி. 4:15-16) நாம் எப்பொழுதும் ஜெப மண்டலத்திலிருக்கிறோம்.
தேவனுடைய சிம்மாசனத்தை அணுக வழி எப்பொழுதும் திறந்தேயிருக்கிறது.