களை என்பது நீ விரும்பாத இடத்தில் வளரும் ஒரு செடி என்று சொல்லி களையெடுக்கும் கருவியை என் கையில் கொடுத்தார் என் தந்தை. நான் பட்டாணி செடிகளுக்கூடே தானாக வளர்ந்திருக்கும் சோளச் செடியை விட்டு விட விரும்பினேன். ஆனால் பண்ணை அனுபவமிக்க என் தந்தை அதனைப் பிடுங்கிவிடச் சொன்னார். அந்த தனிமையான சோளக்கதிர் பயன் தருவதற்குப் பதிலாக பட்டாணிகளை அமிழ்த்தி அவற்றின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் என்றார்.

மனிதர்கள் செடிகளல்ல. நமக்கு தானாகச் சிந்திக்கும் திறனுண்டு. அது தேவன் தந்த சுதந்திரம். ஆனால் நாம் தேவன் நமக்கென்று நியமிக்காத இடங்களில் மலர முயற்சிக்கின்றோம்.

சவுல் ராஜாவின் மகன் யுத்த வீரன். இளவரசன் யோனத்தான் தான் விரும்பியபடி செய்திருக்கலாம். அவன் தான் ஓர் அரசனாகுவதை எதிர்பார்ப்பதற்கு சரியான காரணங்களிருந்தன. ஆனால் அவன் தேவனுடைய ஆசீர்வாதம் தாவீதின் மீதிருந்ததைக் கண்டான். அவன் தன் தந்தையின் பொறாமை பெருமை ஆகியவற்றைக் கண்டு கொண்டான். (1 சாமு. 18:12-15). எனவே தனக்கு மறுக்கப்பட்ட அரியணையை பற்றிக் கொள்ள எண்ணுவதை விட்டு, தன் உயிரையும் பணயம் வைத்து யோனத்தான் தாவீதின் நெருங்கிய நண்பனானான் (19:1-6 ; 20:1-4). அவனுடைய உயிரையும் காத்தான்.

சிலர் யோனத்தான் மிக அதிகமாக விட்டுக் கொடுத்தான் என்கின்றனர். ஆனால் நாம் நினைக்கப்படும்படி என்ன செய்வோம்? பேராசை கொண்ட சவுலைப் போலவா? அவன் தன் அரசாட்சியைப் நிலைப்படுத்த நினைத்தான். ஆனால் அதை இழந்து போனான். அல்லது கனம் பெற்ற இயேசுவின் முன்னோர் பட்டியலில் இடம் பெற்ற ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றிய யோனத்தானைப் போலவா?

தேவனுடைய திட்டங்கள் நம்முடைய திட்டங்களை விட மேலானவை. நாம் அவருடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்போமாயின் தவறான இடத்தில் வளர்ந்த களையைப் போலாவோம். அல்லது அவருடைய வழி நடத்துதலை ஏற்றுக் கொள்வோமாகில் அவருடைய தோட்டத்தில் நாட்டப்பட்டு செழித்து வளர்ந்து கனிதரும் செடியைப் போலிருப்போம். இந்த தேர்ந்தெடுத்தலை அவர் நம்மிடம் விட்டு விட்டார்.