Archives: ஜனவரி 2018

பணிவிடைக்காரன் உள்ளத்தை வளர்த்துக்கொள்ளல்

அது ஒரு நீண்ட வேலைநாள். நான் வீட்டிற்குச் சென்றபோது, ஒரு நல்ல தந்தையாக மற்ற வேலைகளைத் துவக்குவதற்கான நேரம் அது. என் மனைவி, குழந்தைகளின் வரவேற்பு, அப்பா இரவு உணவுக்கு என்ன செய்வது? அப்பா, எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தரமுடியுமா? அப்பா, நாம் கால்பந்து விளையாடலாமா? என்பதாக அமைந்தது.

நான் சற்று நேரம் உட்கார எண்ணினேன். நான் ஒரு நல்ல தந்தையாக இருக்க சிறிது விரும்பியபோதும் என்னுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிபுரிய நான் விரும்பவில்லை. எங்கள் ஆலயத்திலுள்ள ஒருவரிடமிருந்து என் மனைவி பெற்றிருந்த ஒரு நன்றி அட்டையை அப்பொழுது நான் பார்த்தேன். அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஒரு துவாலை, அழுக்கான செருப்புகள் அடங்கிய ஒரு படம் இருந்தது. அதன் அடிப்பகுதியில் லூக்கா 22:27ல் உள்ள வாசகம், “ நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறனே;” இருந்தது.

தாம் தேடவும் ரட்சிக்கவும் (லூக். 19:10) வந்தவர்களுக்குப் பணிவிடைக்காரனைப் போலிருந்தார் என்ற வார்த்தைகளே என்னுடைய அப்போதையத் தேவையாயிருந்தது. இயேசுவே தன்னுடைய சீடர்களின் அழுக்கடைந்த கால்களைக் கழுவுதலாகிய இழிவான வேலையைச் செய்ய சம்மதிக்கும் போது,
(யோவான். 13:1-17) நான் என் மகனுக்கு ஒரு குவளைத் தண்ணீரை முறுமறுக்காமல் கொடுக்கலாம். அந்நேரமே என் குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிசெய்தவை ஒரு கடமையாகயல்ல, இயேசுவின் பணிவிடைகாரனின் உள்ளத்தை பிரதிபலிப்பவனாகச் செய்தேன். நம்மிடம் உதவிகள் கேட்கப்படும்போது, அவைகளை, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பணிவிடை செய்து, தன்னுடைய ஜீவனையே நமக்காகத் தந்தவரைப் போல மாறுவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளாகக் கருதுவோம்.

நினைவு கற்கள்

சில காலை வேளைகளில் நான் ஆன்லைனில் செல்லும் போது, முகநூல் என்னுடைய “நினைவுகள்” பகுதியில் முந்திய ஆண்டு அதே நாளில் நான் பதிவு செய்தவற்றைக் காட்டும். இந்த நினைவுகளில் என்னுடைய சகோதரனின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள், என் மகள் என்னுடைய பாட்டியோடு விளையாடும் காட்சிகள், இவை பொதுவாக எனக்குள் ஒரு புன்னகையைத் தரும். சில வேளைகளில் ஆழ்ந்த உணர்வுகளையும் தருவனவாக அமையும். என்னுடைய மைத்துனரின் கீமோதெரபி சிகிச்சையைக் குறித்த ஒரு குறிப்பையோ அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயாரின் மூளை அறுவைசிகிச்சையால் தலையில் ஏற்பட்ட இணைப்பு தழும்புகளையோ நான் பார்க்கும் போது, கடினமான சூழ்நிலைகளில் தேவனுடைய உண்மையான பிரசன்னம் இருந்ததை நினைவுப்படுத்தின. இந்த முகநூல் நினைவுகள் என்னை ஜெபத்திற்கும் நன்றியறிதலுக்கும் நேராக உந்தித்தள்ளின.

தேவன் நமக்குச் செய்தவற்றை மறந்து போவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. நமக்கும் நினைப்பூட்டுதல் தேவை, தேவனுடைய ஜனங்களை அவர்களுடைய புதிய இருப்பிடத்திற்கு யோசுவா வழிநடத்தின போது யோர்தான் நதியைக் கடக்க நேர்ந்தது (யோசுவா 3:15-16). தேவன் தண்ணீரைப் பிரிக்க, அவருடைய ஜனங்கள் உலர்ந்த தரை வழியாக நடந்து சென்றனர் (வச. 17). இந்த அற்புதத்தை நினைவுகூரும் வகையில் அவர்கள் பன்னிரெண்டு கற்களை நதியின் மையப்பகுதியிலிருந்து எடுத்து நதியின் மறுகரையில் சேர்த்து வைத்தனர் (4:3,6-7). இந்த கற்கள் ஏதென்று பிறர் கேட்கும்போது தேவனுடைய பிள்ளைகள் தேவன் அவர்களுக்கு அன்று செய்ததை அவர்களுக்குச் சொல்லுவார்கள்.

வெளிப்புறமான நினைப்பூட்டிகள், கடந்த காலங்களில் தேவன் நமக்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதை நினைப்பதற்கும், இப்பொழுதும் எதிர்காலத்திலும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும் உதவுகின்றன.

கடனை நீக்குபவர்

என்னுடைய மருத்துவ கட்டணத்தைப் பார்த்தபோது, என் கண்ணீரை நான் அடக்க முடியவில்லை. என் கணவர் நீண்ட நாட்கள் வேலையில்லாமல் இருந்து, பின்னர் மிகவும் குறைக்கப்பட்ட சம்பளத்தில் வேலைபார்க்கும் நிலையில் இருக்கிறார். இந்த மருத்துவச் செலவில் பாதியினைக் கூட மாதத் தவணையாக அநேக வருடங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தேன். நான் மருத்துவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, என்னுடைய சூழ்நிலையை விளக்கி, பணத்தைச் செலுத்தக் கூடிய ஒரு திட்டத்தைக் குறித்துக் கேட்பதற்கு முன்னர் ஜெபம் பண்ணினேன்.

தொலைபேசியில் சிறிது நேரம் என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அந்த வரவேற்பாளர், என்னுடைய மருத்துவக்கணக்கு அத்தனையையும் மருத்துவர் நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

நான் எனது நன்றியைத் தெரிவித்தேன். தாராளமான இந்த நன்கொடையால் என் உள்ளத்தில் நன்றியுணர்வு மேற்கொண்டது. தொலைபேசியை வைத்தவுடன் நான் தேவனைத் துதித்தேன். நான் அந்த கட்டணச்சீட்டைப் பத்திரப்படுத்த எண்ணினேன். நான் எவ்வளவு கடன்பட்டிருந்தேன் என்பதை நினைவுபடுத்த அல்ல, தேவன் எனக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளவே.

என்னுடைய மருத்துவர் என் கடன் முழுவதையும் மன்னித்துவிட்டதைப் போல, தேவன் என்னால் செலுத்த முடியாத கடனாகிய பாவத்தை மன்னிக்கத் தெரிந்து கொண்டார் என்பதை நினைத்துக் கொண்டேன். தேவன், “கரிசனையுள்ளவர், கிருபையுள்ளவர், மாறாத அன்புடையவர்” (சங். 103:8). அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்கு செய்யாமல் இருக்கிறார் (வச. 10), “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்” (வச. 12) என வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது. நாம் மனம் திரும்பி இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவருடைய தியாகம் நம்முடைய பாவத்திற்கான கடனை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது.

ஒருமுறை மன்னிப்பைப் பெற்ற பின்பு, நாம் நமது முந்திய கடனைக் குறித்து குற்றப்படுத்தப்படமாட்டோம். நம்முடைய தேவனின் மனப்பூர்வமான பரிசுக்கும் அவர் நமக்கு செய்த யாவற்றிற்கும் ஈடாக நம்முடைய அர்ப்பணிப்போடுள்ள ஆராதனையையும், நன்றியுள்ள பாசத்தையும் அவருக்குக் கொடுத்து, அவருக்காக வாழ்ந்து அவரின் அன்பைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.

ஒரு பெயர்

கிளியோப்பெட்ரா, கலிலியோ, ஷேக்ஸ்பியர், எல்விஸ், பீலே ஆகிய இவர்கள் பிரசித்திப் பெற்வர்களாகையால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள ஒரேயொரு பெயரே போதுமானது. சரித்திரத்தில் இவர்கள் முக்கிய இடத்திலிருக்கக் காரணம், அவர்கள் யார் எதைச் செய்தார்கள் என்பதே. ஆனால், இவைகளுக்கும் மற்ற எந்த பெயருக்கும் மிகவும் மேலாக நிற்கும் ஒரு பெயர் உண்டு.

தேவகுமாரன் இந்த உலகில் பிறப்பதற்கு முன் தேவதூதன் மரியாளுக்கும் யோசேப்புக்கும் அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத். 1:21), “அவர் உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார்” (லூக். 1:32) எனக் கூறினார். இயேசு பிரபலமானவராக இவ்வுலகிற்கு வரவில்லை. ஆனால், ஒரு பணிவிடைக்காரனாகத் தன்னைத் தாழ்த்தி, சிலுவையில் மரித்தார். எனவே யார் யார் அவரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களை அவர் மன்னித்து, அவர்களைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையாக்குகின்றார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகின்றார், “ ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்னும்படிக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி. 2:9-11).

நம்முடைய மிகப் பெரிய மகிழ்ச்சியிலும் அவசரமானத் தேவைகளிலும் நாம் பற்றிக் கொள்ள வேண்டிய நாமம் இயேசு என்பதே. அவர் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார். அவருடைய அன்பு ஒருபோதும் மாறாதது.

ஞானிகளின் பரிசு

ஒரு இளம் தம்பதியினரிடம் பணத்தைக் காட்டிலும் அன்பே அதிகமாயிருந்தது. கிறிஸ்துமஸ் நெருங்கியபோது இருவருமே ஒருவர் மீது ஒருவர் எத்தனை கரிசனை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டும்படியாக ஒரு பரிசுப் பொருளைக் கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருந்தனர். கடைசியாக கிறிஸ்துமஸ் மாலையில், டெல்லா தன்னுடைய முழங்கால் அளவு நீண்ட கூந்தலை விற்று, தன் கணவன் ஜிம் தன் தாத்தவும், தந்தையும் பயன்படுத்திக் கொடுத்த கைக்கடிகாரத்திற்கு பிளாட்டினத்தால் ஆன சங்கிலியை வாங்கினாள். ஜிம் தன்னுடைய கைக்கடிகாரத்தை விற்று தன் மனைவியின் கூந்தலுக்கு விலையேறப்பெற்ற சீப்புகளை வாங்கியிருந்தான்.

எழுத்தாளர் ஓ. ஹென்றி இந்த இளம் தம்பதியினரின் கதையை ‘ஞானிகளின் பரிசு’ என அழைத்தான். அவர்களுடைய பரிசு வீணாகி, கிறிஸ்துமஸ் காலைப் பொழுதில் அவர்களை முட்டாள்களாகக் காண்பித்த போதும் பரிசு கொடுத்தவர்களின் அன்பு அவர்களை ஞானிகளாக்கியது.

முதல் கிறிஸ்துமஸ் அன்று பெத்லகேமிற்கு பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருட்களோடு வந்த ஞானிகளும் சிலர் பார்வையில் முட்டாள்களாகவே காட்சியளித்தனர் (மத். 2:11) அவர்கள் யூத குலத்தவர் அல்ல. அவர்கள் வெளியிலிருந்து வந்த புறஜாதியினர். அவர்கள் தாங்கள் புதிதாகப் பிறந்துள்ள யூத ராஜாவைக் காண வந்துள்ளோம் எனக் கூறியது எருசலேமின் சமாதானத்தை எவ்வளவாய் பாதிக்கும் என்பதை அறியாதிருந்தார்கள் (வச. 2).

ஜிம், டெல்லாவின் அனுபவத்தைப் போலவே ஞானிகளின் பரிசுத் திட்டம் அவர்கள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. ஆனால், அவர்கள் பணத்தால் வாங்க முடியாத ஒன்றைக் கொடுத்தனர். ஞானிகள் பரிசுப் பொருட்களோடு வந்தனர். ஆனால், அவர்களுக்கும் நமக்கும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த அன்பின் தியாகத்தைப் பணிந்து வணங்கினர்.