சில காலை வேளைகளில் நான் ஆன்லைனில் செல்லும் போது, முகநூல் என்னுடைய “நினைவுகள்” பகுதியில் முந்திய ஆண்டு அதே நாளில் நான் பதிவு செய்தவற்றைக் காட்டும். இந்த நினைவுகளில் என்னுடைய சகோதரனின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள், என் மகள் என்னுடைய பாட்டியோடு விளையாடும் காட்சிகள், இவை பொதுவாக எனக்குள் ஒரு புன்னகையைத் தரும். சில வேளைகளில் ஆழ்ந்த உணர்வுகளையும் தருவனவாக அமையும். என்னுடைய மைத்துனரின் கீமோதெரபி சிகிச்சையைக் குறித்த ஒரு குறிப்பையோ அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயாரின் மூளை அறுவைசிகிச்சையால் தலையில் ஏற்பட்ட இணைப்பு தழும்புகளையோ நான் பார்க்கும் போது, கடினமான சூழ்நிலைகளில் தேவனுடைய உண்மையான பிரசன்னம் இருந்ததை நினைவுப்படுத்தின. இந்த முகநூல் நினைவுகள் என்னை ஜெபத்திற்கும் நன்றியறிதலுக்கும் நேராக உந்தித்தள்ளின.

தேவன் நமக்குச் செய்தவற்றை மறந்து போவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. நமக்கும் நினைப்பூட்டுதல் தேவை, தேவனுடைய ஜனங்களை அவர்களுடைய புதிய இருப்பிடத்திற்கு யோசுவா வழிநடத்தின போது யோர்தான் நதியைக் கடக்க நேர்ந்தது (யோசுவா 3:15-16). தேவன் தண்ணீரைப் பிரிக்க, அவருடைய ஜனங்கள் உலர்ந்த தரை வழியாக நடந்து சென்றனர் (வச. 17). இந்த அற்புதத்தை நினைவுகூரும் வகையில் அவர்கள் பன்னிரெண்டு கற்களை நதியின் மையப்பகுதியிலிருந்து எடுத்து நதியின் மறுகரையில் சேர்த்து வைத்தனர் (4:3,6-7). இந்த கற்கள் ஏதென்று பிறர் கேட்கும்போது தேவனுடைய பிள்ளைகள் தேவன் அவர்களுக்கு அன்று செய்ததை அவர்களுக்குச் சொல்லுவார்கள்.

வெளிப்புறமான நினைப்பூட்டிகள், கடந்த காலங்களில் தேவன் நமக்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதை நினைப்பதற்கும், இப்பொழுதும் எதிர்காலத்திலும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும் உதவுகின்றன.