உன் வழியில் ஒரு மலை குறுக்கிட்டால் நீ என்ன செய்வாய்? தஷ்ரத் மான்ஜியின் கதை அனைவருக்கும் உற்சாகத்தைத் தருவதாய் இருக்கிறது. அவனுடைய மனைவியை அவசர மருத்துவ சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அவனால் கொண்டு செல்ல முடியாததால், அவள் மரித்தாள். ஆனால், மான்ஜி முடியாது என்று கருதிய ஒன்றைச் செய்து முடித்தான். அந்த கிராமத்திலுள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு, மருத்துவ சிகிச்சை பெற செல்ல வசதியாக, 22 ஆண்டுகளாக மலையின் ஊடே ஒரு பாதையைச் செதுக்கினான். அவன் மரிப்பதற்கு முன்னர், இந்திய அரசாங்கம் அவனுடைய சாதனையைப் பாராட்டியது.

எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது என்பது, சிறையிருப்பிலிருந்து திரும்பிய இஸ்ரவேலரின் தலைவர்களில் ஒருவனாகிய செருபாபேலின் பார்வையில் முடியாததாகத் தோன்றியது. ஜனங்கள் ஊக்கமிழந்திருந்தனர், அவர்கள் எதிரிகளிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தனர், அவர்களுக்கு போதிய வளங்கள் இல்லை, ஒரு பெரிய இராணுவப் படை பலமுமில்லை. ஆனால், தேவன் சகரியாவை செருபாபேலிடம் அனுப்பி, அவனுடைய பணியில் ஆவியானவர் செயல்பட்டு. ஒரு சேனையின் பெலத்தையும்விட, தனி மனிதர்களின் பெலத்தையும்விட அல்லது மனித வளங்களையும் விட மேலான வல்லமையையும் விளங்கச் செய்வார் (சகரி. 4:6) என நினைப்பூட்டுகின்றார். இந்த தெய்வீக உதவியின் உத்தரவாதத்தின் மேல் நம்பிக்கையுள்ளவனாய் செருபாபேல் தேவாலயத்தை கட்டும் பணியிலும் அவனுடைய ஜனத்தை மீட்பதிலும், எத்தனை மலைபோன்ற துன்பம் வந்தாலும் தேவன் அவற்றை சமபூமியாக்குவார் என்று தேவன் பேரில் நம்பிக்கை வைத்தான் (வச. 7).

நமக்கு முன்பாக மலைபோன்ற தடைகள் வந்தால் என்ன செய்வோம்? நமக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு, ஒன்று நம்முடைய சொந்த பெலத்தைக் சார்ந்திருப்பது மற்றொன்று தேவ ஆவியானவரை நம்புதல். நாம் தேவ ஆவியானவரின் வல்லமையின் மீது நம்பிக்கை வைப்போமாகில் அவர் ஒருவேளை மலைகளை நொறுக்கி சம பூமியாக்குவார், அல்லது நமக்கு பெலனையும் சகிப்புத் தன்மையையும் கொடுத்து மலைமீது ஏறி கடக்கச் செய்வார்.