ஓர் உலகளவிலான கணினி அமைப்பின் செயலிழப்பினால், பரவலாக விமான சேவைகள் ரத்தாகி, ஆயிரக்கணக்கான பிரயாணிகள் விமானநிலையத்தில் தவித்தனர். ஒரு பனிபுயலின்போது ஏற்பட்ட வாகன விபத்துக்களால் பல பிரபல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. ஒரு நபர் தான் “இப்பொழுதே செய்கிறேன்” என்று வாக்களித்ததைச் செய்யத் தவறினார். இப்படிப்பட்ட விளைவுகளால் ஏற்படும் தாமதம் பெரும்பாலும் கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்கும். ஆனால், இயேசுவை பின்பற்றுபவர்கள், உதவிக்கு அவரை நோக்கிப்பார்க்கக் கூடிய சலுகையைப் பெற்றுள்ளோம்.
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் பொறுமைக்கு பெரிய எடுத்துக்காட்டு யோசேப்பு. அவன் தன் பொறாமை கொண்ட சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்றுப் போடப்பட்டான். தன் எஜமானனின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டு, எகிப்தில் சிறையில் அடைபட்டான். “யோசேப்பு சிறைச் சாலையில் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்தார்” (ஆதி. 39:20-21). சில வருடங்களுக்குப் பின், யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களின் அர்த்தத்தைக் கூறியபோது, அவனை எகிப்து தேசம் முழுமைக்கும், பார்வோனுக்கு அடுத்தப்படியான அதிகாரியாக்கினான் (அதிகாரம் 41).
ஒரு பஞ்சத்தின் போது யோசேப்பின் சகோதரர் அவனிடம் தானியம்கொள்ள வந்தபோது, அவனுடைய பொறுமைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது. “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம். அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினர்… ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்” (45:4-5,8).
நமக்கு ஏற்படும் தாமதம் குறுகியதோ, அல்லது நீண்டதோ, யோசேப்பைப் போன்று தேவன் மீது விசுவாசத்தோடு காத்திருக்கும் போது, நாம் பொறுமையையும் முன்னோக்குப் பார்வையையும், சமாதானத்தையும் பெற்றுக் கொள்வோம்.
தேவன் மேலுள்ள நம்பிக்கை நாம் பொறுமையோடு விசுவாசத்தில் வாழ நமக்கு உதவுகிறது.