“இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன். ஏனெனில் வேதாகமம் அப்படிச் சொல்லுகிறது” என்று அர்த்தங்கொள்ளும் ஓர் ஆங்கிலப்பாடல், நீண்ட நாட்களாக நிலைத்திருக்கும் சிறுவர்களுக்கான ஒரு கிறிஸ்தவப் பாடல். (Jesus loves me this I know)
பதினெட்டாம் நூற்றாண்டில் அன்ணா பி. வார்னர் என்பவரால் எழுதப்பட்ட இப்பாடலின் வார்த்தைகள் தேவனோடு நமக்குள்ள உறவை மென்மையாக உறுதிப்படுத்துகிறது. நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம்.
யாரோ ஒருவர் என் மனைவிக்கு, வீட்டில் தொங்கவிடக்கூடிய ஒரு அட்டையைக் கொடுத்தார். அதில் உள்ள வார்த்தைகள், இந்த எளிய கருத்தைத் திருப்பி, ஒரு புதிய மாற்றத்தைக் கொடுத்துள்ளன. அது, “இயேசு என்னை அறிந்துள்ளார், அதை நான் நேசிக்கிறேன் என்பது. இது தேவனோடு நமக்குள்ள உறவில் ஒரு புது முன்னோக்குப் பார்வையைத் தருகிறது. நாம் தேவனால் அறியப்பட்டிருக்கிறோம்.
பழங்கால இஸ்ரவேலரிடையே ஆடுகளை அன்பு செய்தல், அறிந்து கொள்ளல் என்பவை உண்மையான மேய்ப்பனை கூலி மேய்ப்பனிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. மேய்ப்பன் தன் ஆடுகளோடு அதிக நேரம் செலவிட்டு, அவைகளோடிருந்து கவனிப்பவனாகவும் தன் ஆட்டுக்குட்டிகளைக் குறித்து ஆழ்ந்து அறிந்தவனாகவும் இருப்பான். இயேசுவும் தன் சொந்த ஜனங்களிடம் ஆச்சரியப்படும் வகையில்”, நானே நல்ல மேய்ப்பன்,… நான் என் ஆடுகளை அறிந்தும், என்னுடைய ஆடுகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்… என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்கிறது” (யோவா. 10:14,15,27) என்று கூறுகிறார்.
அவர் நம்மை அறிந்திருக்கிறார், அவர் நம்மை நேசிக்கிறார்! இயேசு நமக்கு வைத்துள்ள நோக்கத்தையும், அவர் நம்மை கவனிக்கிறார் என்ற வாக்கையும் நம்பி, அவர் மீது சாய்ந்திளைப்பாறுவோம். ஏனெனில், “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்” (மத். 6:8). இன்றைய வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளோடு போராடுகிற நீ, அமர்ந்திரு. உன் இருதயத்தின் மேய்ப்பனால் நீ அறியப்பட்டு, அன்பு செய்யப்படுகிறாய்.
இயேசு என்னை நேசிக்கிறார் என்ற நினைவு எல்லாவற்றிற்கும் மேலான அதிசயமாயிருக்கிறது.