என்னுடைய மருத்துவ கட்டணத்தைப் பார்த்தபோது, என் கண்ணீரை நான் அடக்க முடியவில்லை. என் கணவர் நீண்ட நாட்கள் வேலையில்லாமல் இருந்து, பின்னர் மிகவும் குறைக்கப்பட்ட சம்பளத்தில் வேலைபார்க்கும் நிலையில் இருக்கிறார். இந்த மருத்துவச் செலவில் பாதியினைக் கூட மாதத் தவணையாக அநேக வருடங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தேன். நான் மருத்துவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, என்னுடைய சூழ்நிலையை விளக்கி, பணத்தைச் செலுத்தக் கூடிய ஒரு திட்டத்தைக் குறித்துக் கேட்பதற்கு முன்னர் ஜெபம் பண்ணினேன்.
தொலைபேசியில் சிறிது நேரம் என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அந்த வரவேற்பாளர், என்னுடைய மருத்துவக்கணக்கு அத்தனையையும் மருத்துவர் நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
நான் எனது நன்றியைத் தெரிவித்தேன். தாராளமான இந்த நன்கொடையால் என் உள்ளத்தில் நன்றியுணர்வு மேற்கொண்டது. தொலைபேசியை வைத்தவுடன் நான் தேவனைத் துதித்தேன். நான் அந்த கட்டணச்சீட்டைப் பத்திரப்படுத்த எண்ணினேன். நான் எவ்வளவு கடன்பட்டிருந்தேன் என்பதை நினைவுபடுத்த அல்ல, தேவன் எனக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளவே.
என்னுடைய மருத்துவர் என் கடன் முழுவதையும் மன்னித்துவிட்டதைப் போல, தேவன் என்னால் செலுத்த முடியாத கடனாகிய பாவத்தை மன்னிக்கத் தெரிந்து கொண்டார் என்பதை நினைத்துக் கொண்டேன். தேவன், “கரிசனையுள்ளவர், கிருபையுள்ளவர், மாறாத அன்புடையவர்” (சங். 103:8). அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்கு செய்யாமல் இருக்கிறார் (வச. 10), “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்” (வச. 12) என வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது. நாம் மனம் திரும்பி இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவருடைய தியாகம் நம்முடைய பாவத்திற்கான கடனை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது.
ஒருமுறை மன்னிப்பைப் பெற்ற பின்பு, நாம் நமது முந்திய கடனைக் குறித்து குற்றப்படுத்தப்படமாட்டோம். நம்முடைய தேவனின் மனப்பூர்வமான பரிசுக்கும் அவர் நமக்கு செய்த யாவற்றிற்கும் ஈடாக நம்முடைய அர்ப்பணிப்போடுள்ள ஆராதனையையும், நன்றியுள்ள பாசத்தையும் அவருக்குக் கொடுத்து, அவருக்காக வாழ்ந்து அவரின் அன்பைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.
நம்முடைய பாவத்தினால் நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய கடன் முழுவதும் நம்முடைய பெரிய தேவனால் நீக்கப்பட்டுவிட்டது.